சிறையில் இருந்து தப்பிய ஆயுள் தண்டனை கைதி பிடிபட்டார்
பாளையங்கோட்டை சிறையில் இருந்து தப்பிச்சென்ற ஆயுள் தண்டனை கைதி சென்னையில் பிடிபட்டார்.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள மதகநேரியை சேர்ந்தவர் டேவிட் (வயது 46). இவர் பழவூர் போலீஸ் நிலைய பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நெல்லை மாவட்ட 4-வது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இவருக்கு 28.1.2018 அன்று ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
இவர் நன்னடத்தை காரணமாக பாளையங்கோட்டை சிறை வளாகத்தின் வெளியே உள்ள கேண்டீனில் சுமார் 7 மாதங்களாக பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த 27.7.22 அன்று சிறை கேண்டீன் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சிறைத்துறை முதல் தலைமை காவலரின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு தப்பி சென்று தலைமறைவாக இருந்து வந்தார்.
இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு விசாரணை நிலுவையில் இருந்து வந்த நிலையில் சென்னை அம்பத்தூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான மரக்கடையில் அவர் தங்கி வேலை பார்த்து வருவதாக பாளையங்கோட்டை சிறைத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாளையங்கோட்டை சிறைத்துறை முதல் தலைமை காவலர் பெஞ்சமின் மற்றும் சிறை காவலர்கள் சென்னை சென்று நேற்று காலை டேவிட்டை பிடித்து கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அழைத்து வருகின்றனர்.