கலைஞர் பெயரில் புதிய பாடம் கொண்டு வரப்படும்
அடுத்த ஆண்டு பள்ளி பாட புத்தகத்தில் கலைஞர் பெயரில் புதிய பாடம் கொண்டு வரப்படும் என்று தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி கூறினார்.
அடுத்த ஆண்டு பள்ளி பாட புத்தகத்தில் கலைஞர் பெயரில் புதிய பாடம் கொண்டு வரப்படும் என்று தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி கூறினார்.
திண்டுக்கல் லியோனி ஆய்வு
நாகையில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழக மண்டல அலுவலகத்தில் இருந்து நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளி புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் அருகே உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கில் அனைத்து புத்தகங்களும் இருப்பு வைக்கப்பட்டு பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்தை தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து புத்தகங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ள சேமிப்பு கிடங்குக்கும் சென்று ஆய்வு செய்தார். மேலும் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்ட விவரங்கள் குறித்து அங்குள்ள அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
5 கோடியே 16 லட்சம் புத்தகங்கள்
தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக 5 கோடியே 16 லட்சம் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது. இதில் 85 சதவீதம் புத்தகங்கள் பள்ளி தொடங்கிய நாளிலேயே வழங்கப்பட்டு விட்டது. சி.பி.எஸ்.இ., மெட்ரிக் பள்ளிகளில் தமிழை கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளதால் 10 சதவீதம் கூடுதலாக தமிழ் பாட புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளது.
நாகை மண்டல அலுவலகத்தில் இருந்து திருவாரூர், மயிலாடுதுறையில் உள்ள 560 தனியார் பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
கலைஞர் பெயரில் புதிய பாடம்
மேடை நாகரிகத்தை கற்றுக்கொடுத்தவர் கலைஞர். நான் அவரது கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக உள்ளேன். கலைஞர் ஆட்சியில்தான் பெண்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தலைமை கழக பேச்சாளர்கள் மற்றும் அமைச்சர்கள் கண்ணியமாக மேடையில் பேசவேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
பெண்களின் வாழ்க்கைத்தரத்தை பொருளாதாரத்தில் உயர்த்துவதே திராவிட மாடல் ஆட்சியின் லட்சியம் ஆகும். கல்விக்காக மிகப்பெரும் திட்டங்களை கலைஞர் கொடுத்துள்ளார். அடுத்த ஆண்டு பள்ளி பாட புத்தகத்தில் 'செம்மொழி நாயகன் கலைஞர்' அல்லது 'தமிழகத்தின் சிற்பி கலைஞர்' என்ற புதிய பாடம் கொண்டு வரப்படும.
இவ்வாறு அவர் கூறினார்.