மைதானத்திற்குள் அணிவகுப்பை நடத்துவதா? - ஐகோர்ட்டில் ஆர்.எஸ்.எஸ் மேல்முறையீடு


மைதானத்திற்குள் அணிவகுப்பை நடத்துவதா? - ஐகோர்ட்டில் ஆர்.எஸ்.எஸ் மேல்முறையீடு
x

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பை சுற்றுசுவர் கொண்ட மைதானத்துக்குள் அனுமதித்து ஐகோர்ட்டு தனி நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டிருந்தார்.

சென்னை,

அக்டோபர் 2-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அந்த அமைப்பு திட்டமிட்டது. இதற்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க வேண்டும் என்று டி.ஜி.பி.க்கு, சென்னை ஐகோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு அந்த நேரத்தில் தடை விதித்ததால் மாநிலத்தில் நிலவிய சூழ்நிலையை கருதி, ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதை எதிர்த்து டி.ஜி.பி. உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் 50 பேர் கோர்ட்டு அவமதிப்பு வழக்கை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், தமிழ்நாட்டில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, நவம்பர் 6-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இந்தநிலையில், இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில், தமிழ்நாட்டில் கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய 3 ஊர்களில் ஊர்வலம் செல்ல அனுமதிப்பதாகவும், 24 இடங்களில் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க இயலாது என்றும், 23 இடங்களில் உள்ளரங்கில் கூட்டம் நடத்தலாம் என்றும் டி.ஜி.பி. சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கு நீதிபதி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பல்லடம், அருமனை மற்றும் நாகர்கோவில் ஆகிய 6 இடங்களை தவிர, ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட 3 இடங்கள் உள்பட தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அமைதியான முறையில் அணிவகுப்பு மேற்கொள்ள நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க உத்தரவிட்டனர்.

அதன்படி, தமிழ்நாடு முழுவதும் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டங்களை விளையாட்டு மைதானங்கள் அல்லது கூட்ட அரங்குகளில்தான் நடத்த வேண்டும். இந்த கூட்டத்துக்கு செல்வோர் சொந்த வாகனங்களில், பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் செல்ல வேண்டும்.

பிற மதம், சாதி குறித்து எந்த ஒரு வெறுப்பு கோஷங்களை எழுப்பவோ, பாடல்களை பாடவோ கூடாது. மத்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பேசக்கூடாது. இந்திய இறையாண்மைக்கும், தேச ஒற்றுமைக்கும் எதிராக செயல்படக்கூடாது.

இந்த நிகழ்ச்சி பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்த ஒரு இடையூறும் ஏற்படுத்தக்கூடாது. லத்தி உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு வரக்கூடாது. கூம்பு வடிவ ஒலி பெருக்கியை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது. அணிவகுப்பின்போது மதம், மொழி கலாசாரம் ஆகியவைகளுக்கு எதிராக எந்த ஒரு செயலையும் செய்யக்கூடாது.

ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நடந்தால், அதனால் பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்படும் சேதத்துக்கு உரிய இழப்பீடு வழங்க ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பொறுப்பு ஏற்க வேண்டும். இந்த நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் மீறப்பட்டால், அவர்கள் மீது போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் தமிழகத்தின் 44 இடங்களில் அறிவித்து இருந்த ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. சுற்றுச் சுவர் கொண்டு மைதானத்துக்குள் பேரணி நடத்த வேண்டும் என்ற நிபந்தனையால் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பை தள்ளி வைக்க முடிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

மேலும், பேரணி சுற்றுச்சுவர் இருக்கும் மைதானத்தில் நடத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு நிபதந்தனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை 44 இடங்களில் சுற்றுச்சுவர் இருக்கும் மைதானத்தில் நடத்த வேண்டும் என ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்தும், ஊர்வலத்திற்கு அனுமதி கோரியும் ஆர்எஸ்எஸ் சார்பில் இன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி மறுக்கப்பட்ட காலத்தில் மற்ற அரசியல் கட்சிகளின் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கருத்து சுதந்திரம் உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொள்ளாமல் அணிவகுப்பை சுற்றுச்சுவர் இருக்கும் மைதானத்தில் நடத்த தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார், என ஆர்எஸ்எஸ் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விரைவில் விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Related Tags :
Next Story