அரசு பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்


அரசு பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 18 Feb 2023 6:45 PM GMT (Updated: 18 Feb 2023 6:46 PM GMT)

திருத்துறைப்பூண்டி அருகே அரசு பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

கோட்டூர்:

திருத்துறைப்பூண்டி அருகே அரசு பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உயர்நிலைப்பள்ளி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே திருத்தங்கூர் கிராமத்தில் 2019-ம் ஆண்டுமுதல் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் மடப்புரம், இலுப்பூர். திட்டச்சேரி, கோமல், கீராலத்தூர், ஆண்டாங்கரை ஆகிய கிராமங்களில் இருந்து 182-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளி கட்டிடத்தை சுற்றி வயல்களும், முள்மரங்களும் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. மழை பெய்தாலும், சாகுபடிக்கு தண்ணீர் வந்தாலும் பள்ளி கட்டிடத்தை சுற்றி தண்ணீர் தேங்கி நிற்பதால் கோரைப்புல் வளர்ந்துள்ளது. இதனால் காலை வழிபாட்டு கூட்டம் (பிரேயர்) கூட நடத்த முடியாமல், கருவக்காட்டுக்குள் வழிபாட்டு கூட்டம் நடைபெறுகிறது.

விஷஜந்துகள் நடமாட்டம்

மேலும் மாணவர்கள் விளையாடவோ, சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்தவோ முடியாமல் அவதிப்படுகின்றனர்.

பள்ளி கட்டிடத்தை சுற்றி சுற்றுச்சுவர் இல்லாமல் பாதுகாப்பாற்ற நிலையில் உள்ளது. இதனால் பாம்பு உள்ளிட்ட விஷஜந்துகள் நடமாட்டம் உள்ளதால் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

எனவே மாணவர்களின் நலன் கருதி மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு இந்த பள்ளிக்கட்டிடத்தை சுற்றி உள்ள இடங்களை சமன் செய்து விளையாட்டு மைதானம் அமைக்கவும், சுற்றுச்சுவர் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மது அருந்துகின்றனர்

இதுகுறித்து பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அசோகன் கூறுகையில்,

திருத்தங்கூர் கிராமத்தில் முன்னாள் மாணவர்களின் நன்கொடை வழங்கியதால் 122 சென்ட் நிலம் வாங்கி, அதில் அரசு நிதி உதவியுடன் இந்த பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது. இந்த பள்ளி கட்டிட சுற்றுச்சுவர் இன்றி உள்ளதால் இரவு நேரத்தில் சமூக விரோதிகள் புகுந்து மது அருந்தி விட்டு மதுபாட்டில்களை போட்டு செல்கின்றனர்.

மேலும் விஷஜந்துகள் புகுந்து விடுவதால் பள்ளிகளுக்கு மாணவர்களை அனுப்பவே பெற்றோர் அச்சப்படுகின்றனர். பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்

கடந்த இரண்டு ஆண்டுகளாக போராடியும் பள்ளி கூடத்தைபாதுகாக்க சுற்றுச் சுவர் அமைப்பதற்கு நில அளவை பணி தடையாக உள்ளது என்பது வேதனை அளிக்கிறது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்றார்.


Next Story