குமரியில் அட்டகாசம் செய்த புலி சிக்கியது


குமரியில் அட்டகாசம் செய்த புலி சிக்கியது
x

குமரியில் ஒரு மாதமாக அட்டகாசத்தில் ஈடுபட்ட புலியை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.

கன்னியாகுமரி

குலசேகரம்:

குமரியில் ஒரு மாதமாக அட்டகாசத்தில் ஈடுபட்ட புலியை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.

புலி அட்டகாசம்

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே சிற்றாறு ரப்பர் கழக தொழிலாளர் குடியிருப்பு, மல்லமுத்தன்கரை, மூக்கறைக்கல் ஆகிய பழங்குடியின குடியிருப்புகளில் புலி புகுந்து தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது.

6 ஆடுகள், 2 மாடுகளை புலி கடித்துக் கொன்று வேட்டையாடிய சம்பவம் அங்குள்ள மக்கள், ரப்பர் பால் வடிக்க சென்ற தொழிலாளர்களை அச்சத்தில் ஆழ்த்தியது. மேலும் விலங்குகளை வேட்டையாடி வந்த புலி எந்த நேரத்திலும் மனிதர்களை தாக்குமோ? என்ற பீதியால் ரப்பர் கழக தொழிலாளர்கள் 2 நாட்கள் பணிக்கு செல்லாமல் இருந்தனர்.

கூண்டு வைப்பு

இதற்கிடையே புலியை பிடிக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டனர். கண்காணிப்பு கேமராக்கள் வைத்ததோடு சிற்றாறு பகுதியில் 2 கூண்டுகள் வைக்கப்பட்டன. இதுதவிர புலியை பிடிப்பதற்கான சிறப்பு பயிற்சி பெற்ற எலைட் படையினரும் களம் இறக்கப்பட்டனர். டிரோன் கேமரா மூலம் புலி நடமாட்டத்தை கண்டறிந்து பிடிக்கும் பணியும் நடந்தது. இறுதியாக மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் வகையில் டாக்டர் குழுவினரும் வரவழைக்கப்பட்டனர். வனத்துறையினரின் ஒவ்வொரு முயற்சியும் பலனளிக்காமலேயே இருந்தது. ஒவ்வொரு இடமாக மாறி சென்று புலி அட்டகாசத்தில் ஈடுபட்டதால், அதனை பிடிப்பது வனத்துறையினருக்கு பெரும் சவாலாக இருந்தது.

அதே சமயத்தில் காட்டுக்குள் வனத்துறையினரின் நடமாட்டம் அதிகரித்ததால் கடந்த மாதம் 21-ந் தேதிக்கு பிறகு புலியின் அட்டகாசம் இல்லை. இதையடுத்து 28-ந் தேதி முதல் புலியை பிடிக்கும் பணியை வனத்துறையினர் தற்காலிகமாக நிறுத்தினர். மேலும் புலியின் அட்டகாசம் இல்லாததால் மக்களும் நிம்மதியாக இருந்தனர்.

மீண்டும் அட்டகாசம்

ஆனால் 2 வாரம் அடர்ந்த வனப்பகுதிக்கு சென்ற புலி மீண்டும் குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது. இந்த முறை இடத்தை மாற்றி பத்துகாணி ஒருநூறாம் வயல் பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் புகுந்து 2 தொழிலாளர்கள் வளர்த்து வந்த 4 ஆடுகளை கடித்துக் கொன்று வேட்டையாடியது. ஏற்கனவே வேட்டையாடி வந்த சிற்றாறு குடியிருப்புக்கும் தற்போதைய பத்துகாணி ஒரு நூறாம்வயல் பகுதிக்கும் 7 கி.மீ. தூரமாகும்.

இதையடுத்து மாவட்ட வன அதிகாரி இளையராஜா தலைமையில் வனத்துறையினர் மீண்டும் உஷாராகி கடந்த 7-ந் தேதி இரவே அந்த பகுதியில் முகாமிட்டனர். மேலும் புலியை பிடிக்கும் பணியில் முதுமலை புலிகள் சரணாலயத்தில் இருந்து வனத்துறையைச் சேர்ந்த பழங்குடியினரும் இணைந்தனர்.

மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது

பின்னர் நேற்று துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி புலியை பிடிக்கும் டாக்டர்கள் குழுவினரும் களம் இறக்கப்பட்டனர். பத்துகாணி மேலே மண்ணடி, கீழ் மணணடி கல்லறை வயல் பகுதியில் புலியின் நடமாட்டத்தை பொதுமக்கள் பார்த்துள்ளனர்.

இதனால் வனத்துறையினருடன் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் டாக்டர்கள் குழுவினர் மற்றும் முதுமலை பழங்குடி படையினர் நேற்று காலை முதல் பத்துகாணி, ஆறுகாணி கல்லறை வயல் என்ற இடத்தில் புலியை சல்லடை போட்டு தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த இடம் கடையாலுமூடு-ஆறுகாணி மாநில நெடுஞ்சாலையில் இருந்து சுமார் 500 மீட்டர் மட்டுமே தூரம் உள்ள பகுதியாகும்.

இந்த பகுதி ரப்பர் மரங்கள் கொண்டதும், புதர்கள் அடர்ந்த மேடு பள்ளங்கள் நிறைந்த மலை பகுதியாகும். தேடுதல் வேட்டையின் போது மதியம் 3.15 மணிக்கு வனத்துறையினர் புலியின் நடமாட்டத்தை கண்டறிந்தனர். உடனே டாக்டர்கள் முத்து கிருஷ்ணன், மனோகரன் ஆகியோர் துப்பாக்கி மூலம் புலி மீது மயக்க ஊசி செலுத்தினர். சிறிது நேரத்தில் அந்த புலி மயங்கியது. ஒரு மாதமாக சவாலாக இருந்த புலியை பிடித்ததால் வனத்துறையினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

பொதுமக்கள் நிம்மதி

மேலும் புலி பிடிக்கப்பட்ட தகவலை அறிந்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். ஆனால் வனத்துறையினர் அவர்களை அந்த பகுதிக்குள் அனுமதிக்கவில்லை.

பின்னர் மயக்கம் அடைந்த புலியை வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் சாலை பகுதிக்கு தூக்கி வந்தனர். தொடர்ந்து புலியை கூண்டில் அடைத்து டெம்போவில் ஏற்றி பேச்சிப்பாறை சீரோ பாயிண்ட் சோதனைச் சாவடிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மருத்துவக்குழுவினர் மீண்டும் புலியை பரிசோதனை செய்தனர். ஒரு மாதமாக அச்சத்தில் உறைந்திருத்த மக்கள் தற்போது புலி பிடிக்கப்பட்டதால் நிம்மதி அடைந்துள்ளனர்.



Next Story