கலெக்டர் அலுவலகத்தில் அரசு வாகனத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு


கலெக்டர் அலுவலகத்தில் அரசு வாகனத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
x

வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு வாகனத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்

வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு வாகனத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜீப்பில் புகுந்த பாம்பு

வேலூர் மாவட்ட பட்டு வளர்ச்சி துறை மண்டல துணை இயக்குனராக பணியாற்றி வருபவர் சந்திரசேகர். இவரது அரசு வாகனத்தை (ஜீப்) டிரைவர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று முன்தினம் நிறுத்தினார். இந்த நிலையில் நேற்று அந்த ஜீப் அருகே பொதுமக்கள் சென்றபோது அந்த வழியாக வந்த பாம்பு ஜீப்பின் மீது ஏறியதை பார்த்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அக்கம்பக்கத்தில் இருந்தவர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் அந்த பாம்பினை பிடிக்க முயன்றனர். ஆனால் பாம்பு ஜீப்பின் அடிப்பாகத்துக்குள் சென்றுவிட்டது. இதனால் அந்த பாம்பினை பிடிக்க முடியவில்லை.

அதைத்தொடர்ந்து வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் 5 பேர் கலெக்டர் அலுவலகம் விரைந்தனர். அவர்கள் ஜீப்பின் முன்பக்கத்தை திறந்தபோது நல்ல பாம்பு இருந்தது.

போராட்டத்தை கைவிட்டனர்

பின்னர் பாம்பு உள்ளே புகுந்து கொண்டது. அவர்கள் அதை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் அவர்களால் முடியவில்லை. அதைத்தொடர்ந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து பாம்பை வெளியே வரவழைத்து பிடித்து விடலாம் என்று கருதி, தண்ணீரை காரின் முன்பக்க பகுதி, அடிப்பகுதி என அனைத்து இடங்களிலும் அடித்தனர். எனினும் பாம்பு வெளியே வரவில்லை. அவர்களும் அதை பிடிக்க முடியவில்லை.

அதைத்தொடர்ந்து பின்னர் கரப்பான் பூச்சியை கொல்லக்கூடிய பூச்சி மருந்து வாங்கி வந்து வாகனத்தில் அடித்தனர். எனினும் பாம்பு வெளியே வரவில்லை. சுமார் 1 மணி நேரம் தீயணைப்பு வீரர்கள் பாம்பினை பிடிக்க போராடினர். எனினும் அவர்களால் பிடிக்க முடியவில்லை. எனவே ஜீப்பினை ஆட்கள் இல்லாத இடத்தில் நிறுத்திவிட்டு சென்றால் பாம்பு தானாக சென்றுவிடும் என்று அறிவுரை வழங்கி, பாம்பு பிடிக்கும் முயற்சியை கைவிட்டு அங்கிருந்து சென்றனர்.

பரபரப்பு

ஜீப்பில் புகுந்த பாம்பினை பிடிக்க தீயணைப்பு வீரர்கள் போராடிய சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கிருந்த பொதுமக்கள் பலர் கூடிநின்று வேடிக்கை பார்த்தனர்.

பாம்பினை பிடிக்க போராடிய தீயணைப்பு வீரர்களிடம் அங்கிருந்தவர்கள் தங்களுக்கு தெரிந்த ஆலோசனைகளை மாறி, மாறி வழங்கினர். அதை வீரர்கள் கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story