கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்தில் பிரம்மிக்க வைக்கும் அருங்காட்சியகம்
பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்தில் பிரம்மிக்க வைக்கும் வகையில் அருங்காட்சியகம் செயல்படுகிறது. இங்கு 17 வகையான படிப்புகளும் பயிற்றுவிக்கப்படுகிறது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் உள்ள பரங்கிப்பேட்டை கடல்வளம் நிறைந்த பகுதியாகும். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இது முக்கிய கப்பல் துறைமுகமாகவும் விளங்கியது. ஆசியாவின் முதல் இரும்பு தொழிற்சாலை இங்கு நிறுவப்பட்டிருந்தது. இங்கு தயாரிக்கப்பட்ட இரும்பில் தான் லண்டன் பாலத்தையே ஆங்கிலேயேர்கள் கட்டி உள்ளனர். அதற்கான சான்றாக போர்டோநோவா என்று அந்த பாலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பரங்கிப்பேட்டைக்கு மற்றொரு பெயர் போர்டோநோவா. இந்த பெயர் தான் லண்டனில் நிலைத்து நிற்கிறது. இங்குள்ள இரும்பு தொழிற்சாலைக்கு தேவையான இரும்பு தாதை சேலத்தில் இருந்து வெள்ளாறு வழியாக படகு மூலம் கொண்டு வந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 1835-ம் ஆண்டு வரை இந்த இரும்புத்தொழிற்சாலை இயங்கி வந்தது. அதன்பிறகு பல்வேறு காரணங்களால் ஆலை மூடப்பட்டது. இதுபோன்ற பல்வேறு சிறப்பு வாய்ந்த பரங்கிப்பேட்டையில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது.
65 ஆண்டுகளாக...
கடந்த 65 ஆண்டுகளாக கடல்சார் அறிவியலில் கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. கிராமப்புற சூழலில் இந்த மையம் அமைந்துள்ளது. முகத்துவாரம், சேறு நிலங்கள், உப்பங்கழிகள், சதுப்பு நிலங்கள், மணல் நிறைந்த கடற்கரை மற்றும் கடலோர கடல் நீர் போன்ற பல்வேறு சூழலை உள்ளடக்கியது.
இந்த கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையம் கடந்த 2010-2011-ம் கல்வி ஆண்டு முதல் வியத்தகு சாதனைகளை செய்து வருகிறது. இதுவரை 805 பேர் முனைவர் பட்டம், 500 பேர் எம்.பில். பட்டங்களை பெற்றுள்ளனர். கடல் அறிவியல் துறையில் 2500-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகளை வெளியிட்டுள்ளது. முதலில் இங்கு எம்.எஸ்.சி. கடல் உயிரியல் மற்றும் கடலியல், கடலோர மீன் வளர்ப்பு, கடல் உயிரி தொழில்நுட்பம், கடல் நுண்ணுயிரியல் மற்றும் கடல் உணவு தொழில்நுட்ப படிப்புகள், கடல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய முதுகலை படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.
மீன் வளர்ப்பு
சமீபத்தில் இங்கு மீன்வள அறிவியல், மீன் வளர்ப்பு பற்றி தொழில்கல்வி பாடத்திட்டத்தில் 4 ஆண்டு இளங்கலை பாட திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தியது. பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களின் நிதி உதவியுடன் 300-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி திட்டங்களை வெற்றிகரமாக முடித்துள்ளது. நவீன ஆராய்ச்சி வசதிகள், ஆய்வகங்கள், நவீன பகுப்பாய்வு கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன.
புதிய ஆராய்ச்சிகளில், அதன் தோலை உருக்கும் மீன், இடுப்பு துடுப்புகள் இல்லாத மீன், முதுகெலும்பில்லாத மற்றும் மீன்களின் பெருமளவிலான இறப்பை ஏற்படுத்தும் மீனை கண்டறிந்துள்ளது. இந்தியாவின் சதுப்பு நில சுற்றுச்சூழல் அமைப்புகளில் இருக்கும் சுமார் 6 ஆயிரம் உயிரினங்களை இந்த மையம் தொகுத்துள்ளது. இதுவே உலக சுதுப்பு நிலங்களில் உள்ள உயிரினங்களின் மிகப்பெரிய தொகுப்பாகும். இங்குள்ள சதுப்பு நிலங்கள் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமி பேரலை தாக்குதலில் பல உயிர்களை காப்பாற்றியது குறிப்பிடத்கதக்கது.
கடல்சார் அருங்காட்சியகம்
இந்த மையத்தில், கடல் உயிரினங்கள் பற்றிய ஓர் அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 1400-க்கும் மேற்பட்ட கடல் தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாக்கப்பட்டு கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதன் உள்ளே சென்று பார்த்தால், கடல் வாழ் உயிரினங்கள் இத்தனை வகைகள் உள்ளதா? என்று நம்மை பிரம்மிக்க வைக்கும். இதை காண ஏராளமான பொதுமக்கள், மாணவர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதற்கு எவ்வித கட்டணங்களும் வசூலிப்பதில்லை.
17 படிப்புகள்
கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்தில் 17 கடல் சார் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. அதன் விவரம் வருமாறு:-
(பி.எப்.எஸ்சி.) இளங்கலை மீன்வள அறிவியல்
பி.வி.ஓ.சி. மீன் வளர்ப்பு
(எம்.எஸ்.சி.) கடல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பு)
(எம்.எஸ்.சி.) கடல் உயிரியல் மற்றும் கடலியல் (2 ஆண்டு படிப்பு)
(எம்.எஸ்.சி.) கடலோர மீன் வளர்ப்பு (2 ஆண்டு படிப்பு)
(எம்.எஸ்.சி.) கடல் நுண்ணுயிரியல் (2 ஆண்டு படிப்பு)
(எம்.எஸ்.சி.) கடல் பயோடெக்னாலஜி (2 ஆண்டு படிப்பு)
எம்.பில். கடல் உயிரியல் மற்றும் கடலியல்
எம்.பில். கடலோர மீன் வளர்ப்பு
எம்.பில். கடல் நுண்ணுயிரியல்
எம்.பில். கடல் உயிரி தொழில்நுட்பம்
எம்.பில். கடல் அறிவியல் - தொழில்நுட்பம்
பிஎச்.டி. கடல் உயிரியல் - கடலியல்
பிஎச்.டி. கடலோர மீன் வளர்ப்பு
பிஎச்.டி. கடல் நுண்ணுயிரியல்
பிஎச்.டி. கடல் உயிரி தொழில்நுட்பம்
பிஎச்.டி. கடல் அறிவியல் - தொழில்நுட்பம்
மொத்தம் 460 இடங்கள் மட்டுமே. தற்போது ஆன்லைன் மூலம் சேர்க்கை முடிவடைந்து இன்று(புதன்கிழமை) முதல் வகுப்புகள் தொடங்க உள்ளது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக விடுதி வசதிகளும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.