தாய் மாமாவை வெட்டிக்கொன்ற வாலிபர்


தாய் மாமாவை வெட்டிக்கொன்ற வாலிபர்
x

மடிப்பாக்கம் அருகே தாய் மாமாவை வெட்டிக்கொன்ற வாலிபர், உறவினருக்கு தகவல் சொல்லிவிட்டு தலைமறைவாகிவிட்டார்.

மடிப்பாக்கம்,

கடலூர் மாவட்டம் சிறு கிராமம் பகுதியை சேர்ந்தவர் கந்தபெருமாள் (வயது 62). இவர், சென்னையை அடுத்த மடிப்பாக்கம் அருகே உள்ள உள்ளகரம் பெரியார் தெருவில் வசிக்கும் தனது தங்கை பார்வதியின் 2-வது மகன் அர்ஜூன் (22) வீட்டில் கடந்த 10 நாட்களாக தங்கி இருந்தார்.

இந்த நிலையில் அர்ஜூன், ஆதம்பாக்கத்தில் வசிக்கும் அவருடைய சித்திக்கு போன் செய்து, "வீட்டில் தாய் மாமா கந்தபெருமாள் இறந்து கிடப்பதாக" தகவல் தெரிவித்துவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளகரத்தில் உள்ள அர்ஜூன் வீட்டுக்கு சென்று பார்த்தார்.

வெட்டிக்கொலை

அங்கு கந்தபெருமாள் தலையில் வெட்டுக்காயத்துடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவர் பயங்கர ஆயுதங்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரிந்தது. ஆனால் இதுபற்றி தகவல் தெரிவித்த அர்ஜூன் மாயமாகி விட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த மடிப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் பிராங் டி ரூபன், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் கந்த பெருமாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

பூ, பழம்

அர்ஜூனின் தாயார் பார்வதி இறந்துவிட்டார். இதனால் சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள அர்ஜூனை, அவருடைய தாய் மாமாவான கந்தபெருமாள், மாதந்தோறும் கடலூரில் இருந்து சென்னை வந்து பார்த்து செல்வது வழக்கம். அதன்படி தற்போது மருமகனை பார்க்க மடிப்பாக்கம் வந்திருந்தார். அர்ஜூனிடம் பணத்தை கொடுத்து ஓட்டலில் உணவு வாங்கி சாப்பிட்டு வந்ததும் தெரிந்தது.

மேலும் கொலை செய்யப்பட்டு கிடந்த கந்தபெருமாள் அருகே பூ, பழம், ஊதுவத்தி வைக்கப்பட்டு இருப்பதுடன், பாயும் விரிக்கப்பட்டு இருந்தது. எனவே மனநிலை பாதித்த அர்ஜூன், தனது தாய் மாமா கந்தபெருமாளை கொலை செய்துவிட்டு, பூ, பழம் வைத்து இரவு முழுவதும் அவரது உடல் அருகில் படுத்து தூங்கிவிட்டு, அதிகாலையில் தனது சித்திக்கு தகவல் சொல்லிவிட்டு தலைமறைவானது தெரிந்தது.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அர்ஜூனை தேடி வருகின்றனர். அவர் சிக்கினால்தான் கந்தபெருமாள் கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.


Next Story