மின்கம்பத்தில் ஏறி வேலை செய்த தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி


மின்கம்பத்தில் ஏறி வேலை செய்த தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி
x

நெல்லை அருகே மின்கம்பத்தில் ஏறி வேலை செய்தபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.

திருநெல்வேலி

நெல்லை டவுன் கோட்டையடி பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவருடைய மகன் மணிகண்டன் (வயது 30). இவர் மின்வாரியத்தில் தினக்கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று மதியம் கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் மின்பாதை சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இதற்காக அங்குள்ள மின்கம்பத்தில் ஏறி வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்கம்பியில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால் மின்சாரம் தாக்கியதில், மின்கம்பியில் தொங்கியவாறே மணிகண்டன் உயிரிழந்தார்.

தகவல் அறிந்ததும் கங்கைகொண்டான் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மணிகண்டன் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே மணிகண்டனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். அங்கு அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த போலீஸ் அதிகாரிகள், அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது, சிப்காட் வளாக பகுதியில் மின்சாரத்தை தடை செய்துவிட்டு வேலை செய்தபோது எங்கிருந்து மின்சாரம் பாய்ந்தது? என்பது குறித்து தெரிவிக்க வேண்டும். இதற்கு காரணமான மின்வாரிய அதிகாரிகள், தனியார் ஆலை நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம்'' என்றனர். இறந்த மணிகண்டனுக்கு சிவகாமி என்ற மனைவியும், சபரிஷ் என்ற 4 வயது மகனும் உள்ளனர். மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்த சம்பவம் நெல்லை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story