பக்தர்களின் வசதிக்காக விரைவில் தங்கும் விடுதி


பக்தர்களின் வசதிக்காக விரைவில் தங்கும் விடுதி
x
தினத்தந்தி 31 May 2022 7:46 PM GMT (Updated: 1 Jun 2022 4:32 AM GMT)

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக விரைவில் தங்கும் விடுதி கட்டப்படும் என்று நகரமன்ற கூட்டத்தில் தலைவர் செந்தில்குமார் கூறியுள்ளார்.

கடலூர்

சிதம்பரம்,

சிதம்பரம் நகர மன்ற கூட்டம் நேற்று நகர மன்ற தலைவர் கே.ஆர். செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. நகர மன்ற துணைத்தலைவர் முத்து, நகராட்சி கமிஷனர் அஜிதா பர்வின், பொறியாளர் மகாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் ரமேஷ், ஜேம்ஸ்.விஜயராகவன், அப்பு சந்திரசேகரன், வெங்கடேசன், மணி, தில்லை.ஆர்.மக்கின், ஜெயசித்ரா பாலசுப்பிரமணியன், ராஜன், இந்துமதி அருள், ராஜா, புகழேந்தி, சரவணன், தாரணி மற்றும் அனைத்து வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

பிளாஸ்டிக் தடை

கூட்டத்தில் சிதம்பரம் நகராட்சியின் வளர்ச்சி திட்டப்பணிகள், அடிப்படை வசதிகள் குறித்து விவாதங்கள் நடைபெற்றது. தொடர்ந்து கூட்டத்தில் நகரமன்ற தலைவர் கே.ஆர். செந்தில்குமார் பேசுகையில், அனைத்து வார்டுகளிலும் குப்பை தொட்டி வைக்கப்பட உள்ளது. குப்பைகள் எடுக்க 10 வண்டிகள் தயார் நிலையில் உள்ளது. பெருநகரங்களில் உள்ளது போல் காலை 6 மணிக்கு தெருக்களில் விசில் அடித்தால் பொதுமக்கள் வெளியில் வந்து குப்பைகளை கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது கவுன்சிலர்களாகிய உங்களது பொறுப்பு. மேலும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக வார்டுகளில் தடை செய்ய நீங்கள் பணியாற்ற வேண்டியது உங்கள் கையில் உள்ளது.

பன்றிகள் பிடிக்கப்படும்

அதுபோல் நகராட்சி சார்பில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு குறைந்த வாடகைக்கு விடும் வகையில் திருமண மண்டபம் மற்றும் தங்கும் விடுதி விரைவில் கட்டப்படும். சிதம்பரம் நகரம் முழுவதும் ஒரு வார காலத்தில் நகரில் சுற்றித்திரியும் பன்றிகள் அனைத்தும் பிடிக்கப்படும் என்றார்.


Next Story