குடியிருப்புகளில் இருந்து கழிவுநீர் வெளியேற்றுவதை தடுக்க நகராட்சி, பேரூராட்சிகளில் 1-ந் தேதி முதல் நடவடிக்கை கலெக்டர் அரவிந்த் அறிவிப்பு


குடியிருப்புகளில் இருந்து கழிவுநீர் வெளியேற்றுவதை தடுக்க நகராட்சி, பேரூராட்சிகளில் 1-ந் தேதி முதல் நடவடிக்கை கலெக்டர் அரவிந்த் அறிவிப்பு
x

நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து பொது இடங்களில் கழிவுநீர் வெளியேற்றப்படுவதை தடுக்க 1-ந் தேதி முதல் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து பொது இடங்களில் கழிவுநீர் வெளியேற்றப்படுவதை தடுக்க 1-ந் தேதி முதல் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தலையாய கடமை

நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகை, பருவநிலை மாற்றம், நாகரிகத்தின் நவீன பாதிப்பு, அதிகரித்து வரும் கட்டுமானங்கள், ஏனைய காரணங்களினால் வீடுகள், வர்த்தக கட்டிடங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீர் மிக அதிக அளவில் வெளியேற்றப்படுகிறது. இது மனித ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது. குடியிருப்பு பகுதிகளில் இருந்தும், வணிக கட்டிடங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்தும் வெளியேற்றப்படும் கழிவுநீர் கால்வாய்களிலும், குழாய்கள் மூலம் வாய்க்கால்களிலும் கலக்கப்படுவதால் நீர் மாசடைந்து, பாசன நிலங்களும் மாசடைந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

விவசாய நிலம் பாதிக்கப்பட்டு உற்பத்தியிலும், உணவிலும் நச்சு கலக்கும் அபாயம் ஏற்படுகிறது. மனிதர்கள் குடிக்கும், குளிக்கும் நீரில் சாக்கடைநீர் கலந்து வருவதால் நோய் பாதிப்புகள் ஏற்படும் சூழ்நிலையும் உருவாகி வருகிறது. மேலும், பொது இடங்களில் கழிவு நீர் வெளியேற்றப்படுவதால் அந்த இடங்கள் மழைக்காலங்களில் சேரும் சகதியுமாக காட்சியளித்து கொசுக்கள் உற்பத்தியாக வழிவகுக்கிறது. சுகாதார சீர்கேடு ஏற்படுவதிலிருந்து நிலத்தையும் நீரையும் காப்பது நமது தலையாய கடமையாகும்.

சிறப்பு நடவடிக்கை

இது குறித்து தற்போது மிகவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன்பொருட்டு நகராட்சி மற்றும் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு கட்டிடங்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்கூடங்கள் ஆகியவற்றில் இருந்து உருவாகும் கழிவுநீரினை அதனை உருவாக்குபவர்களாலேயே முறையாக கையாளும் வகையில் அக்கட்டிடங்களில் இருந்து கழிவுநீர் பொது இடத்தில் வெளியேறாமல் தடுக்க கட்டிட உரிமையாளரால் கழிவுநீர் உறிஞ்சு குழி அமைக்க ேவண்டும், இதை மீறும் இடங்களில் 1-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது.

எனவே, இதற்கு பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு வழங்கி குமரி மாவட்டத்தை நன்னீரில் கழிவுநீர் கலக்காத மாவட்டமாக மாற்றிட முன்வர வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story