6 மாதத்துக்குள் கூடுதலாக 138 இடங்களில் 4ஜி சேவை வழங்க நடவடிக்கை
மதுரை மாவட்டத்தில் 6 மாதத்துக்குள் கூடுதலாக 138 இடங்களில் 4-ஜி சேவை வழங்கப்பட இருப்பதாக பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதுரை மாவட்டத்தில் 6 மாதத்துக்குள் கூடுதலாக 138 இடங்களில் 4-ஜி சேவை வழங்கப்பட இருப்பதாக பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆலோசனைக் கூட்டம்
மதுரை பி.எஸ்.என்.எல். தொலைதொடர்பு வட்டத்துக்கு உட்பட்ட மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களை சேர்ந்த ஆலோசனைக்குழு உறுப்பினர்களுக்கான கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு ஆலோசனைக்குழுவின் தலைவரும், மதுரை எம்.பி.யுமான வெங்கடேசன் தலைமை தாங்கினார். பி.எஸ்.என்.எல். மதுரை பொது மேலாளர் வேணுகோபால் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மதுரை ஒத்தக்கடை, மேலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பி.எஸ்.என்.எல். சேவை முறையாக கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
மேலூரில் மிகவும் மோசமான சேவைக்காக கடந்த வாரம் அங்குள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. இந்த நிலை மீண்டும் வராமல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. மதுரை நகர்ப்பகுதிகளில் விரைவில் 4ஜி சேவையை அறிமுகம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இதைதொடர்ந்து பேசிய எம்.பி., மதுரை மட்டுமின்றி திண்டுக்கல் மாவட்டத்திலும் மோசமான சேவை வழங்கப்படுகிறது. விமான நிறுவனங்களை தனியாருக்கு கொடுத்ததன் விளைவாக கடந்த ஒரு மாதமாக மதுரை-சென்னை விமான கட்டணம் ரூ.10 ஆயிரத்துக்கு குறையவில்லை. கட்டண நிர்ணயம் செய்ய எந்த அமைப்பும் மத்திய அரசிடம் இல்லை. இந்த நிலை தான் பி.எஸ்.என்.எல்.லுக்கும் ஏற்படும். எனவே இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் தான் விவாதிக்க முடியும். இங்குள்ள அதிகாரிகள், இருப்பதை கொண்டு சிறப்பான சேவை வழங்க முயற்சி எடுக்க வேண்டும் என்றார்.
தொலைதொடர்பு வசதியில்லாத
பின்னர் மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள வனப்பகுதி, தொலைதொடர்பு சேவை கிடைக்காத பகுதிகளில் யூ.எஸ்.ஓ. திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 431 இடங்களில் 4ஜி டவர்கள் 500 நாட்களுக்குள் நிறுவப்படும். இதற்காக அந்தந்த மாநில அரசுகள் 2 ஆயிரம் சதுர அடி நிலம் ஒதுக்கினால் விரைவில் இந்த திட்டம் நிறைவேறும். அதன்படி, மதுரை மாவட்டத்தில் 35 இடங்களிலும், தேனி மாவட்டத்தில் 6 இடங்களிலும், திண்டுக்கல்லில் ஒரு இடத்திலும் 4ஜி நிறுவப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் தற்போது 252 இடங்களில் 2ஜி டவர்களும், 68 இடங்களில் 3ஜி டவர்களும், 138 இடங்களில் 4ஜி டவர்களும் உள்ளன. மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் 26,186 தரைவழி இணைப்புகளும், 22 ஆயிரம் பைபர் இணைப்புகளும் உள்ளன. 2 லட்சத்து 87 ஆயிரம் பிரிபெய்டு வாடிக்கையாளர்களும், 6,900 போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களும் உள்ளனர். மதுரை மாவட்டத்தில் 138 இடங்களில் 6 மாதத்துக்குள் பிரதமரின் சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் 4ஜி டவர்கள் அமைக்கப்பட உள்ளன என தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் துணைப்பொது மேலாளர்கள் ரோஸலின், மோகன்தாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.