அ.தி.மு.க. அறிவிப்பு பற்றி பா.ஜனதா தேசிய தலைமை பதில் அளிக்கும் -அண்ணாமலை பேட்டி


அ.தி.மு.க. அறிவிப்பு பற்றி பா.ஜனதா தேசிய தலைமை பதில் அளிக்கும் -அண்ணாமலை பேட்டி
x

யாத்திரையில் அரசியல் பேச விரும்பவில்லை என்றும், அ.தி.மு.க. அறிவிப்பு பற்றி பா.ஜனதா தேசிய தலைமை பதில் அளிக்கும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

கோவை,

தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண்... என் மக்கள்' என்ற பாத யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். கோவை மாவட்டத்தில் 3-வது நாளாக நேற்று மாலை கணபதி பஸ்நிறுத்தத்தில் இருந்து பாத யாத்திரையை தொடங்கினார். அதனை மத்திய மந்திரி எல்.முருகன் தொடங்கி வைத்து, அண்ணாமலையுடன் நடந்து சென்றார்.

இந்த யாத்திரை தடாகம் சாலை வழியாக சென்று இடையர்பாளையத்தை அடைந்தது. அப்போது வழிநெடுகிலும் கட்சியினர் பட்டாசு வெடித்தும், பெண்கள் ஆரத்தி எடுத்தும், மலர்கள் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகல்

இதற்கிடையே சென்னையில் நடந்த அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், பா.ஜ.க.வுடனான கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவிப்பு வெளியானது. இதுதொடர்பாக பாத யாத்திரையாக சென்ற அண்ணாமலையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது பாத யாத்திரையில் அரசியல் பேச விரும்பவில்லை என்று தெரிவித்தார். பின்னர் சிறிது தூரம் சென்றதும் மீண்டும் நிருபர்கள் அவரிடம் சென்று அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி முறிவு குறித்து கேள்வி எழுப்பினர்.

தேசிய தலைமை முடிவு செய்யும்

அப்போது அண்ணாமலை கூறுகையில், கோவையில் என் மண், என் மக்கள் யாத்திரை நடந்து கொண்டு இருக்கிறது. இதில், அதிகம் பேச நேரமில்லை. ஒரே ஒரு கருத்து என்னவென்றால் அ.தி.மு.க. அறிக்கையை படித்தோம். அவர்கள் தீர்மானம் போட்டது தொடர்பாக தேசிய தலைமை சரியான நேரத்தில் பதிலளிக்கும். இது தான் எங்களின் இன்றைய கருத்து. கூட்டணி குறித்து தேசிய தலைமை மற்றும் தேசிய தலைவர்கள் பேசுவார்கள் என்று தெரிவித்தார்.

பாத யாத்திரையில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. உள்பட அனைத்து பிரிவு நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.


Next Story