அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது நடவடிக்கை கோரி போலீசில் மனு
அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது நடவடிக்கை கோரி போலீசில் மனு அளிக்கப்பட்டது.
விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி அமைப்பாளர் சரஸ்வதி தலைமையில் மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகள் போலீஸ் சூப்பிரண்டிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 20-ந் தேதி மதுரையில் நடந்த அ.தி.மு.க. மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோரை பற்றி அவதூறாக பாடியதையும், உண்மைக்கு புறம்பாக பேசியதையும் முன் வரிசையில் அமர்ந்த அ.தி.மு.க. தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ரசித்து கைதட்டியுள்ளனர். இவ்வாறு நடந்துள்ளது எங்களுக்கு மிகுந்த மன வேதனை அளிக்கிறது. அரசியல் தலைவர்களை விமர்சனம் என்ற பெயரில் தனி மனித சுதந்திரத்தை கொச்சைப்படுத்தும் வகையிலும், அவதூறாகவும், கொலை மிரட்டல் விடுத்தும், பொதுவெளியில் பேசவும், பாடவும் வைத்த அ.தி.மு.க. நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.