கூடலூரில் அ.தி.மு.க.வினர் பேரணி
சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கூடலூரில் அ.தி.மு.க.வினர் பேரணி சென்றனர்.
கூடலூர்,
தேசிய வன உயிரின காப்பகத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு நிரந்தர கட்டிடங்கள் கட்ட தடை விதித்தும், அப்பகுதியை சுற்றுச்சூழல் உணர் திறன் பாதுகாப்பு மண்டலமாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கூடலூர் பகுதியில் கடையடைப்பு உள்பட பல்வேறு தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சுற்றுச்சூழல் உணர்திறன் பாதுகாப்பு மண்டலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக அரசு உரிய நேரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யாததை கண்டித்து அ.தி.மு.க. சார்பில், கூடலூரில் நேற்று கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு பொன் ஜெயசீலன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத், முன்னாள் அமைச்சர் மில்லர், நகர செயலாளர் சையத் அனூப்கான், ஒன்றிய செயலாளர் பத்மநாதன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். பேரணி நகராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு ராஜகோபாலபுரம், பழைய மற்றும் புதிய பஸ் நிலையம் வழியாக சென்று காந்தி திடலை அடைந்தது. பின்னர் அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. சாந்தி ராமு மற்றும் அ.தி.மு.க.வினர் பலர் கலந்துகொண்டனர்.