பைப் கம்பெனியில் பங்குதாரராக சேர்வதாக கூறி ரூ.3 கோடி பெற்று மோசடி செய்த அ.தி.மு.க. பிரமுகரை கைது


பைப் கம்பெனியில் பங்குதாரராக சேர்வதாக கூறி ரூ.3 கோடி பெற்று மோசடி செய்த அ.தி.மு.க. பிரமுகரை கைது
x

பைப் கம்பெனியில் பங்குதாரராக சேர்வதாக கூறி ரூ.3 கோடி பெற்று மோசடி செய்த அ.தி.மு.க. பிரமுகரை கைது செய்து கரூர் குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

கரூர்

தொழிலதிபர்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 40). தொழிலதிபர். இவருக்கும், அ.தி.மு.க பிரமுகரான கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதிக்குட்பட்ட அய்யம்பாளையத்தை சேர்ந்த அன்புநாதன் (55) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக கொடுக்கல், வாங்கல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 2018-ம் ஆண்டு அன்புநாதன், பிரகாசிடம் ரூ.1 கோடி பெற்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு மீண்டும் பிரகாசை தொடர்பு கொண்டு உங்களது தனியார் பைப் கம்பெனியில் பங்குதாரராக சேர்ந்து கொள்வதாக கூறி மீண்டும் ரூ.2 கோடியை பிரகாசிடம் இருந்து பெற்றதாக தெரிகிறது. ஆனால் ரூ.3 கோடியை பெற்று கொண்ட அன்புநாதன் தனியார் பைப் கம்பெனியில் பங்குதாரராக சேர்த்து கொள்ளவில்லையாம்.

கைது

இதனையடுத்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு பிரகாஷ், அன்புநாதனை சந்தித்து தான் கொடுத்த ரூ.3 கோடி கேட்டுள்ளார். அப்போது அன்புநாதன், பிரகாஷை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ரூ.3 கோடியை பெற்று மோசடியில் ஈடுபட்ட அன்புநாதன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பிரகாஷ் கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து, அன்புநாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜாமினில் வந்தவர்

அ.தி.மு.க. பிரமுகரான அன்புநாதன் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலின்போது அய்யம்பாளையத்தில் உள்ள அவரது தோட்டத்து வீட்டில் ரூ.4½ கோடியை பதுக்கி வைத்ததற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளியே வந்துள்ளார். தற்போது ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.


Next Story