ராமர் கோவில் கட்டியதால் மக்கள் பாஜக பக்கம் போய்விடுவார்கள் என்பது தவறான கருத்து - எடப்பாடி பழனிசாமி பேட்டி


ராமர் கோவில் கட்டியதால் மக்கள் பாஜக பக்கம் போய்விடுவார்கள் என்பது தவறான கருத்து  - எடப்பாடி பழனிசாமி பேட்டி
x
தினத்தந்தி 24 Jan 2024 1:29 PM GMT (Updated: 24 Jan 2024 2:08 PM GMT)

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் உள்ள குறைபாடுகளை சரி செய்து திறந்து வைத்திருக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சேலம்,

சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

வரும் 2024ம் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சரியான கூட்டணியை அமைக்கும். நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி நாளை முதல் தொடங்குகிறது.

அதிமுக ஏற்பாடு செய்த மாநாட்டில் 15 லட்சம் மக்கள் கலந்து கொண்டனர். திமுகவால் இளைஞரணி மாநாட்டை நினைத்தபடி நடத்த முடியாமல் இருக்கைகள் நிரப்புவதற்கு கூட ஆள் இல்லாமல் காலியாக இருந்தன. நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற திமுகவின் வாக்குறுதி என்ன ஆனது. நீட் தேர்வுக்கு எதிராக பெறப்பட்ட கையெழுத்துகள் மாநாட்டுக்கு வெளியே சிதறிக்கிடந்தன. திமுக இளைஞரணி மாநாட்டு தீர்மானம் ஒன்றுகூட மக்களுக்கு பயனுள்ளதாக இல்லை.

அதிமுக ஆட்சியில் தான் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கொண்டுவரப்பட்டது. கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் உள்ள குறைபாடுகளை சரி செய்து திறந்து வைத்திருக்க வேண்டும்.

அதிமுக ஆட்சியில் பயணிகளின் தேவைகளுக்கு ஏற்ப திட்டமிட்டு செயல்படுத்தப்பட்ட திட்டத்தை தற்போது உள்ள தமிழ்நாடு அரசு அவசர கதியில் திறந்து வைத்ததால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதால் மக்கள் அனைவரும் பாஜக பக்கம் போய்விடுவார்கள் என்பது தவறான கருத்து. கோவிலை கட்டினால் மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்றால் எடப்பாடியில் அதிமுக போட்டியின்றி வெற்றி பெறும். அதிமுகவை பொறுத்தவரை சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட இயக்கம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story