அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு


அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
x
திருப்பூர்


தாராபுரம் அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக கரையோர கிராம பொதுமக்களுக்கு வருவாய்த்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கரைபுரண்டு ஓடும் வெள்ளம்

அமராவதி அணையில் இருந்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. அதே போன்று திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முகா நதியிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரும் அமராவதி ஆற்றில் கலந்து வந்து கொண்டு உள்ளதால் அமராவதி ஆற்றில் தண்ணீர் இருகரையை தொட்டு செல்கிறது.

இதனால் பொதுமக்கள் யாரும் அமராவதி ஆற்றங்கரையில் குளிக்கவோ துணி துவைக்கவும் கூடாது என வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

எச்சரிக்கை பதாகை

இதனால் தாராபுரம் புறவழிச்சாலை மேம்பாலம் மற்றும் குடிநீர் தடுப்பணை, ஈஸ்வரன் கோவில் ஆற்று பாலம், பழைய ஆற்றுப்பாலம், அலங்கியம் ஆற்றுப்பாலம், மாற்று கொங்குர் மற்றும் கூடுவாந்துறை, ஆத்துக்கால் புதூர் தரைப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் அமராவதி ஆற்று நீருடன் மழைநீர் கலந்து வருகிறது.

இதனால் தாராபுரம் ஈஸ்வரன் கோவில் பகுதியில் இரும்பு கம்பிகளால் தடுப்பு (பேரிகார்டு) அமைத்து ஆற்றுக்குள் யாரும் இறங்கி சென்று குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை பதாகை வைத்துள்ளனர். பல வருடங்களுக்குப் பிறகு இரு கரைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அருகில் உள்ள சுற்றுவட்டார நகர மக்கள் மற்றும் கிராம மக்கள் குடும்பத்துடன் வந்து அமராவதி ஆற்றங்கரையோரம் நின்று வேடிக்கை பார்த்தும், இளைஞர்கள் செல்பி எடுத்தும் செல்கின்றனர்.


Next Story