காவிரி பிரச்சினை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் -அன்புமணி ராமதாஸ்


காவிரி பிரச்சினை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் -அன்புமணி ராமதாஸ்
x

காவிரி பிரச்சினை குறித்து விவாதிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

காவிரியில் தமிழ்நாட்டிற்கு திறந்துவிட கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லை என்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற காவிரி ஆணையத்தின் ஆணையை ரத்து செய்ய வேண்டும்; மேகதாது அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ள கர்நாடக அரசு, இன்னொருபுறம் கர்நாடகத்தின் பல பகுதிகளில் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு எதிராக போராட்டங்களையும் தூண்டிவிட்டு வருகிறது.

கர்நாடகம் இவ்வாறு செய்வதன் நோக்கம் காவிரி பிரச்சினையில் தமிழ்நாட்டிற்கு எதிரான மனநிலையை உருவாக்குவது தான். இந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக காவிரி சிக்கல் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தையும் வரும் 23-ந் தேதி கர்நாடகம் கூட்டியிருக்கிறது.

காவிரி பிரச்சினையை கர்நாடக அரசு திட்டமிட்டு அரசியலாக்கி வரும் நிலையில், இதை தமிழ்நாடு எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது? தங்களின் நலன்களை எவ்வாறு காப்பாற்றப் போகிறது? என்ற கேள்வி தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் மனதில் எழுந்திருக்கிறது.

அனைத்துக் கட்சி கூட்டம்

காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் நிலையில் உள்ள குறுவை பயிர்களை காப்பாற்ற முடியுமா? என்பதே தெரியவில்லை. பெரும்பான்மையான விவசாயிகள் சம்பா சாகுபடி செய்ய ஆர்வம் காட்டவில்லை. குறுவைப் பயிர்களை காப்பாற்றவும், சம்பா சாகுபடியை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.

காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைகளை நிலை நிறுத்தவும், தமிழக விவசாயிகளின் நலன்களைக் காப்பாற்றவும் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அது குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உடனடியாக நடத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story