பழங்கால இரும்பு பெட்டியில் புதையல் இருப்பதாக வதந்தி


பழங்கால இரும்பு பெட்டியில் புதையல் இருப்பதாக வதந்தி
x

குடியாத்தத்தில் மசூதிக்கு வழங்கப்பட்ட பழங்காலத்து இரும்பு பெட்டியில் புதையல் இருப்பதாக கூறப்பட்டதால் அதை அதிகாரிகள் உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். உடைக்க முடியாததால் தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டது.

வேலூர்

பழங்கால இரும்பு பெட்டி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் போஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் இத்திரீஸ் (வயது 57). கட்டுமான ஒப்பந்ததாரர். இவருக்கு சொந்தமான பழைய காலத்து இரும்பு பெட்டி (லாக்கர்) ஒன்று இருந்தது. சுமார் 1000 கிலோ எடை கொண்ட அந்த இரும்பு பெட்டியை மேல்ஆலத்தூர்ரோடு பகுதியில் உள்ள ஜோதிடம் மசூதிக்கு வழங்கி நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் மசூதி அருகே கொண்டு வைத்துள்ளார்.

மேலும் மசூதி நிர்வாகிகளிடம் இது பழைய காலத்து இரும்பு பெட்டி, இதனை பெயிண்டு அடித்து முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள் என கூறி உள்ளார். சிலர் இத்திரீஸ் வழங்கிய இரும்பு பெட்டி ஆற்றில் கண்டெடுத்ததாகவும், அதில் விலை மதிப்புள்ள பொருட்கள் மற்றும் புதையல் இருப்பதாகவும் கூறி உள்ளனர்.

இந்த தகவல் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிய வந்தது. உடனடியாக குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன், துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், தாசில்தார் விஜயகுமார், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, நீர்வளத்துறை உதவி பொறியாளர் ராஜேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு குவிந்தனர்.

உடைக்க முயற்சி

அப்போது அங்கு வந்த இத்திரீஸ் இது எங்கள் குடும்பத்திற்கு சொந்தமான இரும்பு பெட்டி. இதனுடைய சாவி வீட்டில் எங்கேயோ உள்ளது. சில நாட்களில் அதற்கான சாவியை தருகிறேன். இந்த பெட்டியை மசூதிக்கு வழங்கி விட்டேன் என கூறியுள்ளார். ஆனால் அதிகாரிகள் இதில் விலை உயர்ந்த பொருட்கள் இருப்பதாக தகவல் பரவியதால் இதனை திறக்க வேண்டும் என தெரிவித்தனர்.

அப்போது இது மசூதிக்கு வழங்கப்பட்ட பெட்டியை சாவி கொண்டு தான் திறக்க வேண்டும், உடைக்கக்கூடாது எனவும் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அந்த இரும்பு பெட்டியை அதிகாரிகள் எந்திரம் கொண்டு இரும்பு பெட்டியின் ஒரு பகுதியில் வெட்டினர். அந்த இரும்பு பெட்டியில் உள்ளே 3 அடுக்கு உள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு அடுக்கு மட்டும் வெட்டப்பட்டது. மேற்கொண்டு வெட்ட முடியாததால் பொக்லைன் மூலம் அந்த பெட்டியை குடியாத்தம் தங்கம்நகர் சந்திப்பில் உள்ள கியாஸ் வெல்டிங் கடைக்கு கொண்டு சென்று உடைக்க முயற்சி செய்தனர். ஆனால் உடைக்க முடியவில்லை.

5 மணி நேரத்திற்கு மேலாக போராடியும் அந்த இரும்பு பெட்டியை உடைக்க முடியவில்லை. இதனையடுத்து அந்த இரும்பு பெட்டியை இரவு 10.30 மணி அளவில் குடியாத்தம் தாலுகா அலுவலகத்திற்கு அதிகாரிகள் கொண்டு சென்றனர்.


Next Story