வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி 22 பவுன் நகைகள் கொள்ளை


வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி 22 பவுன் நகைகள் கொள்ளை
x
தினத்தந்தி 1 March 2023 7:30 PM GMT (Updated: 1 March 2023 7:30 PM GMT)
சேலம்

ஆத்தூர்:-

ஆத்தூர் அருகே வீட்டில் தனியாக இருந்து மூதாட்டியை தாக்கி 22 பவுன் நகைகளை கொள்ளை அடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய மர்ம நபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையம் ஊராட்சி காமராஜர் காலனி பகுதியை சேர்ந்தவர் அங்கமுத்து (வயது 75). இவருடைய மனைவி செல்லம்மாள் (72). இவர்களுக்கு சொந்தமாக விவசாய நிலங்கள் மற்றும் பாக்கு தோப்புகள் உள்ளன. அங்கமுத்து, செல்லம்மாள் ஆகிய 2 பேரும் தனியாக விவசாய நிலத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்கள்.

நேற்று காலை 10 மணி அளவில் அங்கமுத்து ஓட்டலில் உணவு வாங்குவதற்காக ஆத்தூருக்கு சென்று விட்டார். அதே பகுதியில் ஒரு விசேஷத்திற்கு செல்வதற்காக செல்லம்மாள் தங்க நகைகள் அணிந்து கொண்டு புறப்பட்டு கொண்டு இருந்தார்.

நகை கொள்ளை

அப்போது 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், 45 வயது மதிக்கத்தக்க ஒருவரும் மோட்டார் சைக்கிளில் மூதாட்டியின் வீட்டிற்கு வந்துள்ளனர். பாக்கு தோப்பு குத்தகைக்கு விடப்போவதாக கூறினீர்கள், பாக்கு தோப்பை குத்தகைக்கு எடுத்து நடத்த விருப்பம் உள்ளது எனக்கூறி பேசிக்கொண்டே செல்லம்மாளை கீழே தள்ளிவிட்டு அவர் அணிந்திருந்த தங்கத்தாலி, வளையல், தோடு, மோதிரம், மூக்குத்தி ஆகியவற்றை பறிக்க முயன்றனர்.

இதையடுத்து மர்ம ஆசாமிகளுடன் செல்லம்மாள் போராடினார். இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்களில் ஒருவர், இரும்பு சுத்தியலால் செல்லம்மாள் தலையில் ஓங்கி அடித்தார். இதில் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்த மூதாட்டி அணிந்திருந்த 22 பவுன் தங்க நகைகளை அவர்கள் இருவரும் கொள்ளை அடித்து விட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர்.

உணவு வாங்கிவிட்டு வீடு திரும்பிய அங்கமுத்து, தனது மனைவி செல்லம்மாள் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து கூச்சலிட்டார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் செல்லம்மாளை மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

இது குறித்து தகவல் அறிந்ததும் ஆத்தூர் புறநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் செல்லம்மாளிடமும் விசாரணை நடத்தினர்.

பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் குறித்து, ஆத்தூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story