ஆன்லைன் சூதாட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்


ஆன்லைன் சூதாட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
x

ஆன்லைன் சூதாட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

த.மா.கா.வை பொருத்தமட்டில் ஆன்லைன் சூதாட்டம் தொடரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது. காரணம் ஆன்லைன் சூதாட்டத்தால் பல குடும்பங்கள் சீரழிந்துவிட்டது. இந்தநிலை தொடரக்கூடாது. குறிப்பாக ஆன்லைன் சூதாட்டத்தால் இளைஞர்களின் வாழ்வு ஏமாற்றம் அடைந்து விடக்கூடாது என்று நினைக்கிறோம். ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டும் என்று ஏற்கனவே த.மா.கா. சார்பில் அறிக்கைகள் விடப்பட்டு, வலியுறுத்தப்பட்டது.

மேலும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நான் கவர்னரை சந்தித்தபோது ஆன்லைன் சூதாட்டம் தடை சம்மந்தமாக பேசியபோது, இதற்கு தடை ஏற்படவேண்டும் என்று வலியுறுத்தி கூறினேன். தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக த.மா.கா. குரல் கொடுத்துக்கொண்டு வருகிறது.

ஆன்லைன் சூதட்டம் சம்மந்தமாக தமிழ்நாடு அரசின் மசோதாவை கவர்னர், அரசுக்கு திருப்பி அனுப்பியதாக செய்தி வெளிவந்தது. உண்மை நிலை என்ன? கவர்னர் என்ன விளக்கம் கேட்டார்?, அரசு உரிய விளக்கம் அளித்திருக்கிறதா? என்பதெல்லாம் பொதுமக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தநிலையில், அமைச்சரவை கூட்டத்தில், தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்டம் சம்மந்தமாக மீண்டும் மசோதா நிறைவேற்றப்படும் என்ற செய்தி வெளிவந்திருக்கிறது. எனவே இதன் முக்கியத்துவத்தை கருதி தமிழக அரசும், கவர்னரும் இதில் உள்ள சட்டச்சிக்கலை தீர்க்கக்கூடிய வண்ணம், ஆன்லைன் சூதாட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story