'டாஸ்மாக்' கடைகளை மூட வேண்டும் தமிழக அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்


டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் தமிழக அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்
x

மதுபானத்துக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்றும், டாஸ்மாக் கடைகளை மூடும் முடிவை எடுக்கவேண்டும் என்றும் தமிழக அரசுக்கு, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

போதைப் பொருட்கள் என்பதை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்று சொல்வதற்கு மிக முக்கிய காரணம் சமூகத்தில் நடைபெறும் குற்றங்களையும் தடுக்க வேண்டும் என்பதுதான். ஒருவர் போதையை பயன்படுத்தி தெருவில் விழுந்து கிடப்பதால் மற்றவர்களுக்கு என்ன பிரச்சினை என்று கேட்கக்கூடாது. போதைப்பொருளால்தான் கொலை, கொள்ளை, பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் நடைபெற்று வருகின்றன என்று தமிழக முதல்-அமைச்சர் பேசியிருக்கிறார். இதுபோன்ற ஒரு விழிப்புணர்வுடன் கூடிய ஒரு விளக்கத்தைத்தான் நான் தமிழக முதல்-அமைச்சரிடம் இருந்து எதிர்பார்த்தேன்.

போதை பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் இத்தனை விரிவாக இத்தனை தெளிவாக நம் மாநிலத்தின் முதல்-அமைச்சர் அறிந்திருக்கிறார் என்பதை நினைக்கும்போது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. ஆனால் போதைப் பழக்கத்தின் தீமைகளை பற்றி தெளிவாக அறிந்த நம் முதல்-அமைச்சருக்கு மதுபானம்தான் அதிக போதை தருகிறது என்பதை பற்றிய தெளிவு இல்லாமல் இருப்பதுதான் எனக்கு வருத்தமாக இருக்கிறது.

டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும்

தமிழகத்தில் போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை எடுத்துக்கொண்டால் மதுபானத்திற்கு அடிமையானவர்கள் எண்ணிக்கைதான் மிக அதிகம். தமிழகத்திலுள்ள மாணவ-மாணவிகளும் மிக எளிமையாக மதுபானங்களை வாங்கி பயன்படுத்திய காணொலிகள் சமூக ஊடகங்களில் காண கிடைக்கின்றன. வருங்கால சந்ததியை பாழாக்கி, குடிகெடுக்கும் மதுபானம் ஒரு 'போதைப் பழக்கம்' என்பதை தமிழகத்தின் முதல்-அமைச்சர், ஏன் உணராதது போல நடந்து கொள்கிறார்.

குடும்பத் தலைவிகளுக்கான, பெண்களுக்கான, நலத்திட்டங்களைத்தான் நிறைவேற்ற மனமில்லை, குறைந்தபட்சம் டாஸ்மாக் கடைகளை மூடுங்கள். குடும்பங்களை, பெண்களை நிம்மதியாக வாழ வைக்கும் வகையில், தமிழக அரசின் மதுபான கடைகளை மூடும் முடிவை எடுக்கும்படி தமிழக முதல்-அமைச்சரை தமிழக பா.ஜ.க. சார்பிலும், தமிழக மக்கள் சார்பிலும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story