மேலும் ஒரு சிறுவன் சாவு


மேலும் ஒரு சிறுவன் சாவு
x
தினத்தந்தி 22 Nov 2022 6:45 PM GMT (Updated: 22 Nov 2022 6:49 PM GMT)

பரமக்குடி அருகே கார் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் மேலும் ஒரு சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

ராமநாதபுரம்

பரமக்குடி,

ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 62) வக்கீல். இவரது 2-வது மகன் சர்வேஸ் என்பவர் கிருஷ்ணகிரியில் உள்ளார். அவரது மனைவியின் வளைகாப்பு விழாவிற்கு சோமசுந்தரம் குடும்பத்தினருடன் சென்றார். பின்னர் விழா முடிந்ததும் அங்கிருந்து சோமசுந்தரம் குடும்பத்துடன் ராமநாதபுரம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார்.

பரமக்குடி அருகே உள்ள அரியனேந்தல் நான்கு வழிச்சாலையில் கார் வந்த போது ராமநாதபுரத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பஸ் திடீரென அந்த கார் மீது மோதியது. இதில் காரில் இருந்த சோமசுந்தரத்தின் மனைவி மணிமேகலை, நிர்மலா மற்றும் கார் டிரைவர் செல்வகுமார் ஆகிய 3 பேரும் காருக்குள் உடல் நசுங்கி இறந்து விட்டனர். மேலும் காருக்குள் இருந்த சோமசுந்தரம், அவரது மகன் அர்ஜூன் (40), மருமகள் ரஞ்சனி (34) பேத்தி பாகல் ரியா (9), பேரன் அயான் நன்விட் (7) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மேல்சிகிச்சைக்காக அவர்கள் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி அயான் நன்விட் என்ற சிறுவன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தான். இதை தொடர்ந்து இந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.


Related Tags :
Next Story