அந்தியூர் அருகே பர்கூரில் சரக்கு ஆட்டோவில் கடத்தப்பட்ட ரூ.13 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்- 9 பேர் கைது


அந்தியூர் அருகே சரக்கு ஆட்டோவில் கடத்தப்பட்ட ரூ.13 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக 9 பேரை போலீசார் கைது செய்தார்கள்.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் அருகே சரக்கு ஆட்டோவில் கடத்தப்பட்ட ரூ.13 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக 9 பேரை போலீசார் கைது செய்தார்கள்.

புகையிலை பொருட்கள்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் போலீஸ் நிலையம் முன்பு போலீசார் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினார்கள். இதில் சோளத்தட்டுகளுக்கு அடியில் 50 மூட்டைகள் இருந்தது. அந்த மூட்டைகளை பிரித்து பார்த்தபோது அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து சரக்கு ஆட்டோவில் இருந்த 2 பேரிடம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் சரக்கு ஆட்டோ டிரைவரான பவானி பகுதியைச் சேர்ந்த அருள் (வயது 36), கிளீனரான கர்நாடக மாநிலம் ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (60) ஆகியோர் என்பதும் தெரியவந்தது.

கடத்திய 2 பேர் கைது

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். கர்நாடகா மாநிலம் ராமாபுரம் பகுதியில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்து பவானி அருகே மைலம்பாடியில் உள்ள ஒரு குடோனுக்கு கொண்டு சென்றதாகவும், பின்னர் இவற்றை அந்தியூர், பவானி, அம்மாபேட்டை, வெள்ளித்திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்க இருந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்தனர். கடத்தப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.13 லட்சம் ஆகும்.

இதுெதாடர்பாக அருள், ரமேஷ் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து ஏற்கனவே புகையிலை பொருட்கள் விற்ற ரூ.50 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. புகையிலை கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் சரக்கு ஆட்டோ பர்கூர் போலீஸ் நிலையம் கொண்டு சென்று நிறுத்தப்பட்டது.

மேலும் 7 பேர் கைது

இந்த நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளதாக அருள், ரமேஷ் இருவரும் கொடுத்த தகவலின் பேரில் கோபி காசிபாளையத்தை சேர்ந்த அசோக்குமார் (35), பவானியை சேர்ந்த வஜ்ரவேல் (53), கர்நாடக மாநிலம் ராமாபுரத்தை சேர்ந்த ரமேஷ் (58), அந்தியூரை சேர்ந்த ரஞ்சித் (31), ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்த திருப்பதி (32), மைலம்பாடியை சேர்ந்த ஜெகநாதன் (38), பவானியை சேர்ந்த அருண் (36) ஆகிய 7 பேரை போலீசார் மேலும் கைது செய்தார்கள்.


Related Tags :
Next Story