கூலிப்படையை ஏவி கணவரை கொன்ற பெண் சப்-இன்ஸ்பெக்டர் கைது


தினத்தந்தி 25 Dec 2022 6:45 PM GMT (Updated: 25 Dec 2022 6:47 PM GMT)

ஊத்தங்கரை அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கூலிப்படையை ஏவி கொன்ற பெண் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை போலீசார் கைது செய்தனர். மேலும் திட்டம் வகுத்து கொடுத்த பெண் சாமியார் உள்பட 3 பேர் போலீசில் சிக்கி உள்ளனர்.

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை

ஊத்தங்கரை அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கூலிப்படையை ஏவி கொன்ற பெண் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை போலீசார் கைது செய்தனர். மேலும் திட்டம் வகுத்து கொடுத்த பெண் சாமியார் உள்பட 3 பேர் போலீசில் சிக்கி உள்ளனர்.

முன்னாள் போலீஸ் ஏட்டு மாயம்

கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 48). போலீஸ் ஏட்டுவாக பணியாற்றிய இவர், பணி காலத்தில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டதால் பணி நீக்கம் செய்யப்பட்டார். இவருடைய மனைவி சித்ரா (44). இவர் சிங்காரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர்களின் மகன் ஜெகதீஷ்குமார் (19). இவர்கள் 3 பேரும் ஊத்தங்கரை கவர்னர்தோப்பு பகுதியில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் செந்தில்குமார் கடந்த செப்டம்பர் மாதம் 16-ந் தேதி மாயமானார். இது தொடர்பாக செந்தில்குமாரின் தாயார் பாக்கியம் கல்லாவி போலீஸ் நிலையம், கலெக்டர் அலுவலகத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

2 பேர் சரண்

இதனிடையே மாயமான செந்தில்குமாரின் செல்போனும், அவரது மகனின் செல்போனும், இவர்களது கார் டிரைவர் கமல்ராஜ் (37) செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அவர்கள் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை கடந்த 13-ந் தேதி விசாரணைக்கு வருமாறு போலீசார் கூறினர்.

ஆனால் அவர்கள் போலீசில் ஆஜராகாமல் கடந்த 14-ந் தேதி கிருஷ்ணகிரி கோர்ட்டில் சரண் அடைந்தனர். அப்போது அவர்கள் செந்தில்குமாரை கொலை செய்து தென்பெண்ணை ஆற்றில் உடலை வீசி விட்டதாக போலீசாரிடம் கூறினர். இதையடுத்து அவர்கள் 2 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

கிணற்றில் இருந்து உடல் எடுப்பு

இதையடுத்து இந்த கொலை தொடர்பாக செந்தில்குமாரின் மனைவி சித்ராவிடம் ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு அமலா அட்வின் விசாரணை நடத்தினார். மேலும் சேலம் சிறையில் இருந்த ஜெகதீஷ்குமார், கார் டிரைவர் கமல்ராஜ் ஆகிய 2 பேரையும் போலீசார் சேலம் சிறையில் இருந்து காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

அப்போது செந்தில்குமாரை கொலை செய்து உடலை கல்லை கட்டி ஊத்தங்கரை பாரதிபுரம் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் வீசியது தெரிய வந்தது. இதையடுத்து செந்தில்குமாரின் உடலை நேற்று முன்தினம் கிணற்றில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

மனைவி உள்பட 4 பேர் கைது

இந்த நிலையில் ஜெகதீஷ்குமார், கமல்ராஜ் ஆகியோரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் செந்தில்குமாரை அவரது மனைவி சித்ரா கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சித்ரா, பாவக்கல்லைச் சேர்ந்த பெண் சாமியார் சரோஜா என்கிற சரோஜா தேவி (37), கூலிப்படையை சேர்ந்த ஊத்தங்கரை பாரதிபுரம் விஜயகுமார் (21), தூத்துக்குடி மாவட்டம் மாங்குட்டைபுரம் கிழக்கு தெருவை சேர்ந்த ராஜ பாண்டியன் (32) ஆகிய 4 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

மேலும் போலீஸ் ஏட்டு கொலை வழக்கில் தலைமறைவான கூலிப்படை தலைவன் வெள்ளைச்சாமி, செங்குட்டுவன் ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். கைதான சித்ரா போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

கள்ளக்காதல்

எனது கணவர் செந்தில்குமார் அடிக்கடி குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். அதனால் ஏட்டுவாக இருந்த அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் அவர் கடந்த 2008-ல் ஒரு காரை வாங்கி அதை வாடகைக்கு ஓட்டி வந்தார். மேலும் அவர் பணிபுரிந்த காலத்தில் நானும், அவரும் சேர்ந்து ஒரு வீடு வாங்கினோம்.

எனது கணவரிடம் கார் டிரைவராக கமல்ராஜ் என்பவர் வேலை பார்த்தார். முதலில் அவருடன் நான் சாதாரணமாக பழகினேன். இந்த பழக்கம் நாளடைவில் எங்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. மேலும் எனது கணவருக்கு வேடியம்மாள் என்ற பெண்ணுடன் தொடர்பு இருந்தது.

உல்லாச வாழ்க்கை

எனது கணவர் வீட்டில் இல்லாத நேரங்களில் கமல்ராஜ் எங்கள் வீட்டிற்கு வருவார். நாங்கள் உல்லாசமாக இருந்து வந்தோம். கமல்ராஜ் அடிக்கடி எனது வீட்டிற்கு வந்து சென்றது எனது கணவருக்கு தெரிய வந்தது. இதனால் அவர் எங்களை கண்டித்தார். ஒரு நாள் எனது கணவர் செந்தில்குமார் வீட்டுக்கு வந்தபோது நான் கமல்ராஜூடன் தனிமையில் இருந்தேன்.

இதைப்பார்த்து ஆத்திரம் அடைந்த அவர், வீட்டில் இருந்த பொருட்களை உடைத்தார். அதன் பிறகு அவருக்கும், கமல்ராஜூக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இது தொடர்பாக கமல்ராஜ் கொடுத்த புகாரில் எனது கணவர் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு ஜாமீனில் வந்தார். இதன் பிறகு அவர் வீட்டிற்கு எப்போதாவது வந்து செல்வார்.

பெண் சாமியாரின் திட்டம்

எனக்கு தொடர்ந்து பிரச்சினைகள் வந்ததால் பாவக்கல்லை சேர்ந்த பெண் சாமியார் சரோஜாவை சந்தித்தேன். எனது பிரச்சினைகளை கேட்ட அவர், என்னிடம் கூலிப்படை உள்ளது. ரூ.10 லட்சம் கொடுத்தால் உனக்கு இடையூறாக இருக்கும் கணவரை தீர்த்து கட்டி விடலாம். யாருக்கும் தெரியாமல் கதையை முடித்து விடுவோம் என்று திட்டம் போட்டு கொடுத்தார்.

இதையடுத்து நான் ரூ.9 லட்சத்து 60 ஆயிரம் தயார் செய்து பெண் சாமியார் சரோஜாவிடம் கொடுத்தேன். அந்த பணத்தை கூலிப்படை தலைவன் வெள்ளைச்சாமியிடம் சாமியார் கொடுத்தார். அப்போது நான், எனது கணவரின் கதையை முடித்து விடுங்கள். இதில் நான் சம்பந்தப்பட்டது யாருக்கும் தெரிய கூடாது என்று கூறினேன்.

கிணற்றில் போட்டோம்

அதன்படி சம்பவத்தன்று செந்தில்குமாரை எனது மகன் ஜெகதீஷ்குமார் மூலம் வீட்டிற்கு வரவழைத்தோம். அங்கு தயாராக இருந்த கூலிப்படையினர், அவரை அடித்துக்கொலை செய்தனர். பின்னர் உடலை அங்கேயே போட்டு விட்டு சென்றனர். நான் பணி முடிந்து இரவு வீட்டிற்கு வந்தேன். அங்கு எனது கணவரின் உடல் கிடந்தது. அந்த உடலை என்னால் தூக்க முடியவில்லை.

இதைத் தொடர்ந்து வெள்ளைச்சாமியை வீட்டுக்கு வரச்சொலலி, அவரின் காரில் உடலை கொண்டு சென்றோம். பின்னர் உடலில் கல்லை கட்டி பாரதிபுரத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் போட்டு விட்டோம். எனது கணவர் காணாமல் போனது முதல் நாங்கள் புகார் எதுவும் செய்யவில்லை. ஆனால் அவரது தாயார் புகார் கொடுத்தார்.

கோர்ட்டில் சரண்

இதனால் போலீசார் எனது கணவர் மாயமான வழக்கை தீவிரமாக விசாரணை செய்து வந்தனர். இந்த விசாரணை தீவிரமடைந்ததால் என் மீது சந்தேகம் வராமல் இருக்க எனது கள்ளக்காதலன் மற்றும் எனது மகனை கோர்ட்டில் சரண் அடைய சொன்னேன். அதன்படி அவர்கள் 2 பேரும் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

இந்த வழக்கில் போலீசார் எங்கள் அனைவரின் செல்போன் உரையாடல்கள், நாங்கள் யாருடன் எல்லாம் பேசி உள்ளோம் என்பதை ஆராய்ந்து முதலில் பெண் சாமியார் சரோஜாவை கைது செய்தனர். அவர் நடந்த சம்பவங்களை கூறியதால் நாங்களும் மாட்டிக் கொண்டோம்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் அளித்துள்ளார்.


Next Story