கல்லூரி மாணவரை இரும்பு கம்பியால் தாக்கிய சக மாணவர் கைது


கல்லூரி மாணவரை இரும்பு கம்பியால் தாக்கிய சக மாணவர் கைது
x

ஒரு தலையாக காதலித்த பெண்ணுக்கு வேறு இடத்தில் திருமண ஏற்பாடுகள் நடந்ததால் ஆத்திரத்தில் கல்லூரி மாணவரை இரும்பு கம்பியால் தாக்கிய சக மாணவரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி

ஒரு தலையாக காதலித்த பெண்ணுக்கு வேறு இடத்தில் திருமண ஏற்பாடுகள் நடந்ததால் ஆத்திரத்தில் கல்லூரி மாணவரை இரும்பு கம்பியால் தாக்கிய சக மாணவரை போலீசார் கைது செய்தனர்.

ஒருதலை காதல்

கிருஷ்ணகிரியை அடுத்த சுண்டம்பட்டியை சேர்ந்தவர் வேணுகோபால். இவரது மகன் உலகநாதன் (வயது 19). இவர் கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலை கல்லூரியில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கிருஷ்ணகிரி திருவண்ணாமலை சாலை சீனிவாசா காலனியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் சந்திர பிரகாஷ் (19). இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

உலகநாதனும், சந்திரபிரகாஷம், ஒரே பள்ளியில் படித்து வந்தனர். அப்போது உடன் படித்த மாணவியை சந்திரபிரகாஷ் ஒருதலையாக காதலித்து வந்தார். இதற்கிடையே உலகநாதனுக்கும், சந்திரபிரகாஷ் ஒருதலையாக காதலித்த பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்க அவர்களின் குடும்பத்தினர் அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

இரும்பு கம்பியால் தாக்குதல்

இதை அறிந்த சந்திரபிரகாஷ், நேற்று முன்தினம் உலகநாதன் படிக்கும் கல்லூரிக்கு சென்றார். பின்னர் அவரை வெளியே வரவழைத்த சந்திரபிரகாஷ், உலகநாதனுடன் தகராறு செய்தார். இதில் ஆத்திரமடைந்த சந்திரபிரகாஷ், இரும்பு கம்பியால் உலகநாதனை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து உலகநாதன் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரபிரகாசை கைது செய்தனர். அவர் மீது ஆபாசமாக பேசுதல், தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story