கள்ளக்குறிச்சியில் கலைத்திருவிழா: அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வியோடு தனித்திறனையும் கற்றுக்கொடுக்க வேண்டும் ஆசிரியர்களுக்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் வேண்டுகோள்
அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வியோடு, தனித்திறனையும் கற்றுக் கொடுக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு கலெக்டர் ஷ்ரவன் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கலைத்திருவிழா
கள்ளக்குறிச்சி அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கலைத்திருவிழா போட்டி நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சரஸ்வதி தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆரோக்கியசாமி, ராஜ், துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை கீதா வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் கலந்துகொண்டு கலை திருவிழாவை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
மாணவர்கள் பயன்பெறும் வகையில்...
அப்போது அவர் பேசியதாவது:-
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளின் கலைத்திறன்களை வெளிக்கொண்டு வரும் விதமாகவும், லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையிலும் வட்டார மற்றும் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்படுகிறது.
இப்போட்டிகள் அரசு பள்ளியில் 6 முதல் 8-ம் வகுப்புவரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு ஒரு பிரிவாகவும், 9 மற்றும் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 2-ம் பிரிவாகவும், 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 3-ம் பிரிவாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. ஓவியம் வரைதல், மெல்லிசை பாட்டு, நாட்டுப்புறப்பாடல், வில்லுப்பாட்டு, வாத்திய கருவிகள், கிராமிய நடனங்கள், கும்மி நடனம், தனி நடனம், நாடகம், தனி நபர் நடிப்பு, பலகுரல் பேச்சு, கதை எழுதுதல், கவிதை எழுதுதல், பேச்சுப் போட்டி, திருக்குறள் ஒப்பித்தல், கட்டுரைப்போட்டி, பட்டிமன்றம் மற்றும் அனைத்து வகையான நாட்டுப்புற நடனங்கள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெறவுள்ளது.
வெளிநாடு சுற்றுலா
மேலும் இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களை வட்டார அளவிலும், வட்டார அளவில் வெற்றி பெறும் மாணவர்களை மாவட்ட அளவிலும், மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்களை மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க செய்யப்படுவார்கள். .மாநில அளவில் நடைபெறும் கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் கலைத்திறன்களை ஊக்குவிக்கும் விதமாக பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். மாநில அளவில் வெற்றி வெறும் மாணவர்களின் தர வரிசையில் முதன்மை பெறும் 20 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள்.
எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தங்களது தனித்திறன்களை வெளிப்படுத்துவதற்கு இப்போட்டிகள் மிகப் பெரிய வாய்ப்பாக அமையும். இதனை பயன்படுத்தி மாநில அளவில் பரிசுகள் பெற்று கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வியோடு தனித்திறன்களையும் கற்றுக்கொடுக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார். இதில் உதவி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பழனியாப்பிள்ளை மற்றும் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், அரசு பள்ளி மாணவிகள் கலந்துகொண்டனர்.