கலைஞர் மகளிர் உரிமை திட்ட சிறப்பு முகாம்
கலைஞர் மகளிர் உரிமை திட்ட சிறப்பு முகாம்
கும்பகோணம் பகுதியில் நடந்த கலைஞர் மகளிர் உரிமை திட்ட சிறப்பு முகாமில் கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகா சாக்கோட்டை ஊராட்சியில் செயல்படும் பொதுவினியோக திட்ட அங்காடியில் உணவு பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்தும், திப்பிராஜபுரம் ஊராட்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், வகுப்பறை கட்டிடத்தின் தன்மை குறித்தும், நூலகம், கணினிஅறை, கழிவறை, சுற்றுச்சுவர் போன்ற வசதிகள் குறித்தும் கலெக்டர் தீபக் ஜேக்கப் நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர் அவர், அசூர் ஊராட்சியில் ரூ.1 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய நூலக கட்டிடத்தின் தரம் குறித்தும், அசூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.8 லட்சத்து 29 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் சமையல் கூடத்தையும், அதே ஊரில் செயல்படும் நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் பணியையும் ஆய்வு செய்தார்.
சிறப்பு முகாம்
மேலும் அவர், திப்பிராஜபுரம் ஊராட்சி அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் அசூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் சிறப்பு முகாமில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளிகளின் விண்ணப்பங்களை பதிவு செய்யும் பணியையும் ஆய்வு செய்தார். அப்போது இந்த பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
முன்னதாக தஞ்சை மாவட்டம் பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்ற கலெக்டர் தீபக் ஜேக்கப் அங்கிருந்த மருத்துவர், பணியாளர் வருகை பதிவேடு, பிரசவ வார்டு, பல் மருத்துவப்பகுதி, பெண்கள், குழந்தைகள் பிரிவு, பதிவு சீட்டு வழங்கும் இடம், அவசர சிகிச்சை பிரிவு, ஆய்வகம், மருந்தகம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் பூர்ணிமா, தாசில்தார் வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பூங்குழலி, ஆனந்தராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.