ஆறுமுகநேரி சாகுபுரம் கமலாவதி சி.பி.எஸ்.இ. பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ஆறுமுகநேரி சாகுபுரம் கமலாவதி சி.பி.எஸ்.இ. பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
ஆறுமுகநேரி:
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி சாகுபுரத்தில் உள்ள கமலாவதி சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளி 1972-ம் ஆண்டில் டி.சி.டபுள்யூ. ஆலையின் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் தொடங்கப்பட்ட முதலாவது சி.பி.எஸ்.இ. பள்ளியான இங்கு சாகுபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு பயின்ற பலர் அரசு ஊழியர்கள், அதிகாரிகள், தொழில்அதிபர்கள், அரசியல்வாதிகள், தொழில் முனைவோர்கள் என்று பல்வேறு உயர் பதவிகள், பொறுப்புகளை வகித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கமலாவதி சி.பி.எஸ்.இ. பள்ளியின் 50-வது ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடும் நோக்கத்தில், முன்னாள் மாணவர் சங்க சந்திப்பு கூட்டம் சென்னை தரமணியில் உள்ள ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர் சங்க அரங்கில் நடைபெற்றது. உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள இப்பள்ளியின் முன்னாள் மாணவர்களை ஒன்றிணைக்கும் வகையிலான திட்டத்தை செயல்படுத்தி, ஒரு அறக்கட்டளையை உருவாக்கும் நோக்கில் இந்த கூட்டம் நடத்தப்பட்டது. முன்னாள் மாணவர் சங்க அறக்கட்டளையின் நிர்வாகிகள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த அறக்கட்டளையின் மூலம் பள்ளியில் பயிலும் மாணவர்களில் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தேவையான கல்வி உதவிகளை வழங்குவது என்றும், ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கும் தேவையான உதவிகளை செய்து கொடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில், இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அருணாசலபிரதேசத்தின் அரசு செயலாளர் சுந்தரேசன், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஜெகதீஸ் சந்திரா, அயர்லாந்து நாட்டில் உள்ள தொழில் அதிபரும், கவுரவ தூதரக அதிகாரியுமான ராஜீவ் மேச்சேரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பல வருடங்களுக்கு பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள் அனைவரும் தங்களது மலரும் நினைவுகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.