சிதம்பரம் நடராஜர் கோவிலில் தணிக்கை முடிந்த நகைகளை மீண்டும் சரிபார்க்க அதிகாரமில்லை இந்து சமய அறநிலையத்துறைக்கு பொதுதீட்சிதர்கள் கடிதம்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தணிக்கை முடிந்த நகைகளை மீண்டும் சரிபார்க்க அதிகாரமில்லை என இந்து சமய அறநிலையத்துறைக்கு பொதுதீட்சிதர்கள் கடிதம் அனுப்பி உள்ளனர்.
சிதம்பரம்,
சிதம்பரம் நடராஜர் கோவில் பொதுதீட்சிதர்கள் சார்பில் அதன் செயலாளர் சி.எஸ்.எஸ்.ஹேமசபேச தீட்சிதர், கடலூர் இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையரும், நகை சரிபார்ப்பு அலுவலருமான ஜோதிக்கு நேற்று கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
எங்களது நம்பகத்தன்மையை நிரூபிக்கவே 2005-ம் ஆண்டுக்கு பின் வரபெற்ற நகைகள் சரிபார்ப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளித்தோம். 2005-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலான நகை சரிபார்ப்பு பணி கடந்த செப்டம்பர் மாதம் 28-ந்தேதி பூர்த்தியானது. மேற்படி நகை சரிபார்ப்பில் எந்த குறைபாடுகளும் இல்லை என்பதை தங்கள் துறையின் குழுவினர் அறிந்து கொண்டனர். மீண்டும் இறுதியாக நாங்கள், தங்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் தணிக்கை முடிந்த நகைகளை மீண்டும் தணிக்கை செய்வதற்கு நடராஜர் கோவிலை பொறுத்தவரை தங்கள் துறைக்கு அதிகார வரம்போ, சட்டரீதியான உரிமையோ இல்லை. நாங்கள், ஏற்கனவே பொதுவெளியில் தெரிவித்தது போல் பட்டயம்பெற்ற தணிக்கையாளர் மூலமாக நகை சரிபார்ப்பு மற்றும் கணக்குகள் சரிபார்ப்புக்கு வெளி தணிக்கை செய்ய உள்ளோம் என்பதையும், அந்த தணிக்கை தற்போது நடைமுறையில் உள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். அதனால் தாங்கள் நாளை(திங்கட்கிழமை) நகைசரிபார்ப்பு சம்பந்தமான நடவடிக்கைகளை கைவிடும்படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.