தேனி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில்100 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு:கலெக்டர் தகவல்


தேனி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில்100 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு:கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 26 March 2023 6:45 PM GMT (Updated: 26 March 2023 6:46 PM GMT)

தேனி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 100 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

தேனி

கொப்பரை கொள்முதல்

தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேனி மாவட்டத்தில் சுமார் 22 ஆயிரத்து 500 ஹெக்டர் நிலப்பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தேங்காய்களின் விலை குறையும் போது விவசாயிகள் அவற்றை மதிப்பு கூட்டி தேங்காய் கொப்பரைகளாக விற்பனை செய்து வருகின்றனர். சமீப காலங்களாக, தேங்காய் கொப்பரைகளின் விலை வெளி சந்தையில் குறைந்தபட்ச ஆதார விலையை விட குறைவாக இருந்து வருகிறது.

எனவே விலை ஏற்ற இறக்கத்தில் இருந்து விவசாயிகளைப் பாதுகாத்து, தேங்காய் கொப்பரைக்கு நல்ல விலை கிடைக்கும் பொருட்டு, தேனி மாவட்டத்திலும் அரசின் குறைந்தபட்ச ஆதாரவிலைத் திட்டத்தின் கீழ் கொப்பரை கொள்முதல் செய்திட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, தேனி மாவட்டத்துக்கு 100 டன் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆதார விலை

மத்திய அரசால் 2022-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட குறைந்த பட்ச ஆதரவு விலையான அரவைக் கொப்பரைக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.108.60 என்ற விலையில் தேனி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) முதல் வருகிற செப்டம்பர் மாதம் வரை கொள்முதல் செய்யப்பட உள்ளது.

கொப்பரை உற்பத்தி செய்யும் விவசாயிகள் தேனி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தினை அணுகி தங்களது பெயருடன் நிலச்சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் அவற்றின் நகல்களை சமர்ப்பித்து பதிவு செய்து பயன்பெறலாம்.

மத்திய அரசின் கொள்முதல் நிறுவனமான நாபெட் நிறுவனம் அரவை கொப்பரைக்கு பரிந்துரைத்துள்ள தரத்தில் தேங்காய் கொப்பரை கொள்முதல் செய்யப்படும்.

ஈரப்பதம்

கொப்பரையில் அயல் பொருட்கள் 1 சதவீதம், பூஞ்சாணம் மற்றும் கருமை நிறம் கொண்ட கொப்பரை 10 சதவீதம் (எண்ணிக்கையில்), சுருக்கம் கொண்ட கொப்பரைகள் 10 சதவீதம், சில்லுகள் 10 சதவீதம் (எடையில்), ஈரப்பதம் 6 சதவீதம் வரை இருக்கலாம். எனவே, தேனி மாவட்டத்தில், தென்னை விவசாயிகளின் நலனுக்காக தமிழ்நாடு அரசால் மேற்கொண்டுள்ள இந்த கொப்பரைக் கொள்முதல் திட்டத்தில் விவசாயிகள் மிக அதிக அளவில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story