ரேஷன் கடைகளில் முதியோர்களுக்கு பதில் வேறுநபர்கள் பொருட்கள் வாங்க அங்கீகாரச்சான்று


ரேஷன் கடைகளில் முதியோர்களுக்கு பதில் வேறுநபர்கள் பொருட்கள் வாங்க அங்கீகாரச்சான்று
x
தினத்தந்தி 24 Dec 2022 6:45 PM GMT (Updated: 24 Dec 2022 6:47 PM GMT)

ரேஷன் கடைகளில் முதியோர்களுக்கு பதில் வேறுநபர்கள் பொருட்கள் வாங்க வேலூர் மாவட்டத்தில் 15 ஆயிரம் பேருக்கு அங்கீகாரச்சான்று வழங்கப்பட்டு உள்ளது.

வேலூர்

ரேஷன் கடைகளில் முதியோர்களுக்கு பதில் வேறுநபர்கள் பொருட்கள் வாங்க வேலூர் மாவட்டத்தில் 15 ஆயிரம் பேருக்கு அங்கீகாரச்சான்று வழங்கப்பட்டு உள்ளது.

முதியவர்கள்

ரேஷன் கடைகளில் பொருட்கள் பெற வேண்டும் என்றால் அதற்கு ரேஷன் கார்டு அவசியமாகிறது. கார்ட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் ஒருவர் பயோ மெட்ரிக் முறையில் கட்டாயம் விரல் ரேகையை வைத்து பொருட்கள் வாங்கிச் செல்ல முடியும்.

இந்த நிலையில் ஆதரவற்ற முதியவர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள் பலர் கைரேகையை வைத்து பொருட்கள் வாங்குவதில் சிரமம் உள்ளது. சில நேரங்களில் அவர்களுக்கு கைரேகை கருவியில் ஏற்றுக்கொள்ளாது. இதனால் அவர்கள் பலமுறை முயற்சி செய்தும் பொருட்களை வாங்க முடியாத நிலை உள்ளது. எனவே அவர்களின் வசதிக்காக அவர்கள் நியமிக்கும் நபருக்கு பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த நபருக்கு அங்கீகாரச்சான்று வழங்கப்பட்டு வருகிறது.

15,000 பேருக்கு அங்கீகார சான்று

இதுகுறித்து பொதுவினியோகத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

தனியாக வசிக்கும் மூத்த குடிமக்களின் கைரேகை ரேஷன் கடை கருவியில் சில நேரங்களில் பதிவாக சூழல் உள்ளது. எனவே முதல்கட்டமாக அவர்கள் ஆதார் விவரங்களை அப்டேட் செய்ய கூறுகிறோம். அவ்வாறு மேற்கொண்ட பின்னரும் அவர்களால் கைரேகை மூலம் பொருட்களை வாங்க முடியவில்லை என்றால் அவர்களின் நண்பர்களோ அல்லது உறவினர்களுக்கோ அங்கீகாரச்சான்று வழங்கப்படும். அந்த நபர் கடைகளுக்கு வந்து பொருட்களை வாங்கி கொடுக்கலாம்.

நடக்க முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்கள் தெரிவிக்கும் நபர்களுக்கு இந்த சான்று வழங்கப்படுகிறது. வேலூர் தாலுகாவில் மட்டும் சுமார் 3 ஆயிரம் பேர் வீதம் மாவட்டத்தில் 15 ஆயிரம் பேருக்கு அந்த சான்று வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்


Next Story