சிற்ப யானைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
நெல்லையப்பர் கோவிலில் ‘சிற்ப யானைகள் சொல்லும் கதைகள்’ என்ற தலைப்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது
சமீப காலங்களாக யானைகள் மிகப்பெரிய பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. யானைகளின் பாதுகாப்பை வலியுறுத்தி கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஆகஸ்டு மாதம் 12-ந்தேதி உலக யானைகள் தினமாக கடைபிடிக்கப்டுகிறது. பழந்தமிழ் இலக்கியங்களில் அதிகம் பேசப்பட்டுள்ள உயிரினங்களில் ஒன்றாக யானை உள்ளது. யானைகளின் வாழ்க்கை, வலசை, யானை-மனிதர்களுக்கிடையே இருந்த தொடர்பு குறித்த ஆயிரக்கணக்கான தகவல்களும் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன.
தமிழகத்தில் உள்ள கோவில்களிலும் யானைகளின் சிற்பங்கள் அதிகளவு உள்ளன. இவை ஒவ்வொன்றும் பல்வேறு செய்திகளை தாங்கி நிற்கின்றன. அவற்றை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், நெல்லையப்பர் கோவிலில் 'சிற்ப யானைகள் சொல்லும் கதைகள்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மணிமுத்தாறு அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம், அரசு அருங்காட்சியகம், நெல்லை நீர்வளம் அமைப்பு, இந்து சமய அறநிலையத்துறை இணைந்து நடத்திய நிகழ்ச்சியில், திண்டுக்கல்லைச் சேர்ந்த யானைகள் ஆர்வலர் தென்னன் பங்கேற்று சிற்ப யானைகள் குறித்து விளக்கி கூறினார்.
முன்பு நெல்லை நகரமானது வேணுவனமாக (மூங்கில் காடுகளாக) இருந்துள்ளது. யானைகள் விரும்பி உண்ணும் உணவு மூங்கில் என்பதால், இந்த பகுதிகளில் யானைகள் அதிகளவில் வாழ்ந்திருக்க வேண்டும். அதை குறிக்கும் வகையில், யானை சிற்பங்கள் நெல்லையப்பர் கோவிலில் அதிகமாக உள்ளன. இந்த சிற்பங்கள் குறித்து பெருந்தச்சன் தென்னன் மெய்மன், தஞ்சாவூர் மற்றும் நெல்லை அமிர்தா வித்யாலாயம் பள்ளி வரலாற்று ஆசிரியர் கோமதி சங்கர் ஆகியோர் பள்ளி மாணவர்களிடையே கதைகளாக எடுத்து கூறினர். தொடர்ந்து யானைகள் படம் வரைதல் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் காந்திமதி அம்பாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புஷ்பலதா வித்யா மந்திர் மற்றும் அமிர்தா வித்யாலயா பள்ளிகளைச் சார்ந்த 60 மாணவர்கள் மற்றும் நெல்லை நீர்வளம் அமைப்பின் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்புமைய ஒருங்கிணைப்பாளர் மதிவாணன், அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்தியவள்ளி, பேரிடர் மேலாண்மை தாசில்தார் செல்வம் ஆகியோர் செய்திருந்தனர்.