சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் வாகனங்களுக்கு ஒருவழிப்பாதை அமலுக்கு வந்தது


சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் வாகனங்களுக்கு ஒருவழிப்பாதை அமலுக்கு வந்தது
x
தினத்தந்தி 24 Dec 2022 6:45 PM GMT (Updated: 24 Dec 2022 6:45 PM GMT)

சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தா்கள் வாகனங்களுக்கு கம்பம் வழியாக ஒருவழிப்பாதை அமலுக்கு வந்தது.

தேனி

அய்யப்பன் கோவில்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகர ஜோதி விழா வருகிற 14-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி தேனி மாவட்டம், கூடலூர், குமுளி வழியாக சபரிமலைக்கு தினமும் ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் சென்று வருகின்றனர். பக்தர்களின் வாகன எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக, பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவும், வாகன நெரிசலை தவிர்க்கவும் சபரிமலை செல்லும் வாகனங்களுக்காக கம்பம் மெட்டு மலைப்பாதை ஒவ்வொரு ஆண்டும் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு வந்தது.

இந்த ஆண்டும் பக்தர்களின் நலன் கருதி நேற்று முன்தினம் முதல் சபரிமலை செல்லும் வாகனங்களுக்கு ஒருவழிப்பாதை திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன்படி தேனியில் இருந்து சபரிமலைக்கு செல்லும் வாகனங்கள் சின்னமனூர், கம்பம், கம்பம்மெட்டு, கட்டப்பனை, வாகமன், ஏலப்பாறை, குட்டிகானம், பூத்துக்குழி, முண்டகயம், எருமேலி, பம்பை வழியாக செல்ல வேண்டும். இதற்காக கம்பம் புதுப்பட்டி புறவழிச்சாலையில் தற்காலிக போலீஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டது.

சோதனை சாவடி

அந்த சோதனை சாவடியில் உள்ள போலீசார் வாகனங்களை கம்பம் நகர் பகுதிக்குள் செல்ல விடாமல் திருப்பி விடுகின்றனர். சபரிமலையில் இருந்து குட்டிகானம், வண்டிப்பெரியார், குமுளி, குமுளி மலைப்பாதை வழியாக கூடலூர் புறவழிச்சாலை வழியாக வாகனங்கள் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இந்த போக்குவரத்து வழித்தட மாற்றத்தை ஒழுங்குப்படுத்தும் வகையில், பக்தர்களின் வாகனங்களுக்கு வழித்தடம் மற்றும் தகவல்கள் தெரிவிப்பதற்காக முக்கியமான சாலை சந்திப்புகளில் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் அய்யப்ப பக்தர்கள் பாதை மாறி செல்லாத வகையில் தேனியில் இருந்து சபரிமலை செல்வதற்கான வழித்தட வரைபடத்தினை (ரூட் மேப்) டிரைவர்களுக்கு போலீசார் வழங்கினர்.


Next Story