தாளவாடி அருகே மீண்டும்கரும்பு தோட்டத்துக்குள் புகுந்த கருப்பன் யானை
தாளவாடி அருகே கரும்பு தோட்டத்துக்குள் மீண்டும் புகுந்த கருப்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடியாமல் மருத்துவக்குழுவினர் ஏமாற்றம் அடைந்தனர்.
தாளவாடி
தாளவாடி அருகே கரும்பு தோட்டத்துக்குள் மீண்டும் புகுந்த கருப்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடியாமல் மருத்துவக்குழுவினர் ஏமாற்றம் அடைந்தனர்.
கருப்பன் யானை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வனச்சரகங்கள் தாளவாடி, ஜீர்கள்ளி. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் இருந்து கருப்பன் என்ற யானை கடந்த 1 ஆண்டுக்கும் மேலாக அடிக்கடி வெளியேறி அருகில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து அங்கு பயிரிட்டிருக்கும் கரும்பு, வாழை போன்ற பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. எனவே கருப்பன் யானையை பிடிக்க கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு, அதன் உதவியுடன் மருத்துவக்குழுவினர் 2 முறை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயன்றனர். ஆனால் ஊசிக்கு மயங்காமல் அடர்ந்த வனப்பகுதிக்குள் கருப்பன் யானை சென்றுவிட்டது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். கும்கி யானைகளும் பொள்ளாச்சிக்கு சென்றுவிட்டன என்பது அனைவரும் அறிந்ததே.
மீண்டும் அட்டகாசம்
இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கருப்பன் யானை மீண்டும் தாளவாடி பகுதிக்கு வரத்தொடங்கியதுடன், விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தது.
இதைத்தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பகம் தெப்பகாட்டில் இருந்து பொம்மன், சுஜய் என 2 கும்கி யானைகள் கடந்த 20-ந் தேதி தாளவாடி வனச்சரகத்துக்கு கொண்டு வரப்பட்டன. இதையடுத்து வனச்சரகர்கள் ராமலிங்கம் (ஜீர்கள்ளி), சதீஸ் (தாளவாடி), ஓய்வு பெற்ற டாக்டர் மனோகர், கால்நடை டாக்டர்கள் சதாசிவம் (சத்தியமங்கலம்), ராஜேஷ்குமார் (முதுமலை) மற்றும் 150 வன ஊழியர்கள் கருப்பன் யானையை பிடிக்க தயார்படுத்தப்பட்டனர்.
ஏமாற்றம்
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு மீண்டும் கருப்பன் யானை சின்ராசு என்பவரின் தோட்டத்துக்கு வந்து, கரும்பு பயிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்த தொடங்கியது. இதுபற்றி அறிந்ததும் வனத்துறையினர், மருத்துவ குழுவினர் சின்ராசுவின் கரும்பு தோட்டத்துக்கு சென்றனர். காலை 5 மணி அளவில் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் முடிவு செய்திருந்தனர். ஆனால் யானை அதிகாலை 3 மணிக்கே தோட்டத்தில் இருந்து வெளியேறி வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இதனால் கருப்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடியாமல் வனத்துறையினர் ஏமாற்றம் அடைந்தனர்.