போதிய தண்ணீரின்றி கருகிய வாழை


போதிய தண்ணீரின்றி கருகிய வாழை
x

கோடை வெயில் காரணமாக போதிய தண்ணீர் இல்லாததால் வாழை பயிர் கருகியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

சிவகங்கை

காளையார்கோவில்,

கோடை வெயில் காரணமாக போதிய தண்ணீர் இல்லாததால் வாழை பயிர் கருகியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தண்ணீர் பஞ்சம்

சிவகங்கை மாவட்டம் வானம் பார்த்த பூமியாக உள்ளதால் இந்த மாவட்டத்தில் பெய்ய வேண்டிய பருவ மழை நன்றாக பெய்து கண்மாய்கள் நிரம்பினால் மட்டும் இந்த பகுதியில் தண்ணீர் பஞ்சமில்லாமல் விவசாயமும் செய்ய முடியும் என்ற நிலை உள்ளது.

இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளாக போதிய அளவில் மழை பெய்ததால் இந்த பகுதியில் குடிதண்ணீர் பஞ்சம் இல்லாமல் இருந்து வருகிறது. ஒரு சில இடங்களில் நல்ல மழை பெய்து அந்த பகுதியில் விவசாயிகள் நெல் பயிர் விளைவித்து முதல் போக அறுவடையும் செய்தனர்.

பற்றாக்குறை

சில இடங்களில் எஞ்சிய தண்ணீரை பயன்படுத்தி வாழை பயிர், கடலை, பருத்தி, துவரை உள்ளிட்ட பயிர் களையும் பயிரிட்டு வந்தனர். திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், இளையான்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முதல் போக அறுவடைக்கு பின்னர் நிலத்தை உழவு செய்து அதில் விவசாயிகள் வாழை பயிர் நடவு செய்து பாதுகாத்து வந்தனர்.

இந்தநிலையில் கடந்த 25 நாட்களுக்கும்மேல் சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெயில் வாட்டி வதைத்தது. இதனால் இங்குள்ள கிணறுகளில் தண்ணீர் குறைந்து பற்றாக்குறை ஆனது.

வாழை பயிர்

இதையடுத்து ஏற்கனவே பயிரிட்ட வாழை பயிர், வாழைத்தார் காய்த்து இன்னும் சில நாட்களில் அறுவடை செய்ய இருந்த நிலையில் கடைசி காலகட்டத்தில் பாய்ச்ச வேண்டிய தண்ணீர் இல்லாததால் பயிரிட்ட வாழை மரங்கள் கருகும் நிலை ஏற்பட்டு உள்ளது.

காளையார்கோவில் அருகே பள்ளித்தம்மம், இளையான்குடி அருகே முனைவென்றி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பயிரிட்ட வாழை பயிர்கள் தற்போது கருகும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறியதாவது:- நெல் பயிர் அறுவடை செய்த பின்னர் சுமார் 200 ஏக்கர் வரை வாழை பயிர் பயிரிட்டு அதை காத்து வந்தோம். ஏற்கனவே வாழை பயிர் செழித்து வந்த நிலையில் காட்டு பன்றி மற்றும் காட்டு விலங்குகள் சேதப்படுத்தி வாழை பயிர்களை அழித்தது.

நஷ்டம்

இருப்பினும் உரமிட்டு, தண்ணீர் பாய்ச்சி அவற்றை பாதுகாத்து வந்தோம். தற்போது கடைசி காலக்கட்டத்தில் பாய்ச்சுவதற்கு தண்ணீர் இல்லாததால் வாழைத்தார்கள் காய்த்த நிலையில் வாழை பயிர்கள் கருகி வருகிறது. இதனால் ஏக்கருக்கு பல ஆயிரம் ரூபாய் வரை நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story