ஜன்னலை உடைத்து கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி


ஜன்னலை உடைத்து கூட்டுறவு   வங்கியில் கொள்ளை முயற்சி
x
திருப்பூர்

குண்டடம்:

குண்டடத்தில் கூட்டுறவு நிலவள வங்கியின் ஜன்னலை உடைத்து உள்ளே சென்ற ஆசாமிகள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். லாக்கரை திறக்க முடியாததால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் தப்பியது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நிலவள வங்கி

திருப்பூர் மாவட்டம் குண்டடம்-கோவை ரோட்டில் அய்யப்பன் கோவில் வீதியில் கூட்டுறவு நில வள வங்கி செயல்படுகிறது. நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்ததும் பணியாளர்கள் வங்கியை பூட்டிவிட்டு சென்றனர். பின்னர் நேற்று அதிகாலை வங்கியின் காவலாளி வடுகன் வங்கிக்கு சென்றார். அப்போது வங்கியின் பக்கவாட்டு ஜன்னல் உடைக்கப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த காவலாளி, வங்‌கி செயலாளர் மற்றும் குண்டடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே தாராபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு தனராசு, இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செல்வம் மற்றும் போலீசார் வங்கிக்கு வந்து பார்வையிட்டனர். அப்போது வங்கியின் பக்கவாட்டு ஜன்னல் கம்பி உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோக்கள், மேஜை டிராயர் திறந்து கிடந்தது. அதில் இருந்த ஆவணங்கள் சிதறிக்கிடந்தன. ஆனால் வங்கி லாக்கர் பாதுகாப்பாக இருந்தது.

போலீசார் விசாரணை

ஜன்னல் வழியாக வங்கிக்குள் புகுந்த கொள்ளையர்கள் முதலில் கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்தி உள்ளனர். பின்னர் லாக்கரை திறக்க முடியாததால் பல லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணம் தப்பியது. லாக்கரை திறக்க முடியாத ஆத்திரத்தில் கொள்ளையர்கள் பீரோ மற்றும் மேஜையில் இருந்த ஆவணங்களை சேதப்படுத்திவிட்டு தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர்.

குண்டடம் போலீஸ் நிலையத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில்தான் நிலவள வங்கி உள்ளது. அப்படி இருந்தும் வங்கியில் கொள்ளையர்கள் கைவரிசையை காட்டியது பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி வங்கி செயலாளர் ஓம்கண்ணப்பன் அளித்த புகாரின் பேரில் குண்டடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story