பட்டாசு ஆலையில் தடை செய்யப்பட்ட சரவெடிகள்
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் தடை செய்யப்பட்ட சரவெடி உற்பத்தி செய்ததை கண்டு ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
சிவகாசி,
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் தடை செய்யப்பட்ட சரவெடி உற்பத்தி செய்ததை கண்டு ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அதிகாரிகள் ஆய்வு
விருதுநகர் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது. இதில் ஒரு சில பட்டாசு ஆலைகளில் விதிகளை மீறி பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படுவதாகவும், சில பட்டாசு ஆலைகளில் சுப்ரீம் கோர்ட்டால் தடை செய்யப்பட்ட சரவெடிகள் தயாரிப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வந்தது. இந்த நிலையில் மாவட்ட போலீஸ் நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் சிவகாசி உட்கோட்ட போலீஸ் அதிகாரிகள் பல்வேறு இடங்களில் திடீர் ஆய்வுகள் நடத்தி தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
சரவெடிகள்
இந்தநிலையில் எம்.புதுப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் ஏ.ராமச்சந்திராபுரம்-ஆமத்தூர் ரோட்டில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் திடீர் ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு 1000 வாலா சரவெடிகள் 3 பெட்டிகளும், 10 ஆயிரம் வாலா சரவெடிகள் ஒரு பெட்டியும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவற்றை பறிமுதல் செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் இதுகுறித்து மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதிகாரிகளின் உத்தரவின் பேரில் பட்டாசு ஆலையின் உரிமையாளர் சோலையம்மாள் மற்றும் நிர்வாகிகள் பார்த்திதரன், விஜயகுமார் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.