'இந்தியா' கூட்டணியால் நிச்சயம் பா.ஜனதாவை வீழ்த்த முடியும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


இந்தியா கூட்டணியால் நிச்சயம் பா.ஜனதாவை வீழ்த்த முடியும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

சிறு, சிறு வேற்றுமைகளை களைந்துவிட்டால் ‘இந்தியா' கூட்டணியால் நிச்சயம் பா.ஜ.க.வை வீழ்த்த முடியும் என்று சென்னையில் நடந்த தி.மு.க. மகளிர் உரிமை மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பாக பேசினார்.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற தி.மு.க. மகளிர் உரிமை மாநாட்டுக்கு தலைமை தாங்கி, கட்சியின் தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நிச்சயம் வீழ்த்த முடியும்

இந்த மேடையில் இருக்கிற தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். ஒற்றுமையால் மட்டுமே பா.ஜ.க.வை வீழ்த்த முடியும். 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒற்றுமையான கூட்டணி மூலம் வெற்றி கண்டோம். எனவே, இந்தியா முழுவதும் இதுபோன்ற ஒரு ஒற்றுமையான கூட்டணியை ஏற்படுத்த வேண்டும். பா.ஜ.க. கூட்டணிக்கு எதிரான கட்சிகள் இடையே ஒற்றுமையான கூட்டணியை உருவாக்குவதில் சிறு சிறு வேற்றுமை இருக்கலாம். அவற்றை களைந்து விட்டால், இந்திய மக்களுக்கு எதிராக செயல்படும் பா.ஜ.க. அரசை நிச்சயமாக வீழ்த்திவிட முடியும். இதை மேடையில் இருப்பவர்கள் தங்களது தலைவர்களிடம் தெரிவிக்க கேட்டுக்கொள்கிறேன்.

பா.ஜ.க.வை தோற்கடிப்பது என்பது இந்திய ஜனநாயகத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் வரலாற்று கடமை. மகளிர் உரிமையை காப்பாற்றுவதற்காக இந்த மாநாட்டை கூட்டியிருக்கிறார் தங்கை கனிமொழி. மகளிர் உரிமை மட்டுமா?, பா.ஜ.க. ஆட்சியில் அனைத்து மக்களின் உரிமைகளும் பறிக்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கு நாம் பார்க்கும் நாடாளுமன்ற அமைப்பு முறை இருக்குமா?. மக்களால் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய மக்கள் ஆட்சி இருக்குமா? என்ற கேள்வி பெரிதாக எழுந்து வருகிறது.

பெண்களை ஏமாற்ற முயற்சி

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு, ஒரே தேர்தல், ஒரே தேர்வு, ஒரே உணர்வு என்ற பெயரால் ஒற்றை கட்சி ஆட்சியை கொண்டு வருவதற்காக பிரதமர் நரேந்திரமோடி இன்றைக்கு முயன்று கொண்டிருக்கிறார். அது நடந்தால் ஒரே மனிதர் என்ற எதேச்சதிகாரத்திற்கு அது வழிவகுக்கும். எனவேதான் வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை முற்றிலும் தோல்வியடைய செய்ய வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், பெண்களை ஏமாற்ற, மகளிருக்கு நாடாளுமன்றத்தில், சட்டமன்றங்களில் 33 சதவீத இடஒதுக்கீட்டை சட்டமாக கொண்டுவருவது போல ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இங்கே பேசிய தலைவர்கள் அனைவரும் தெளிவாக எடுத்துச்சொன்னார்கள். எனவே, நான் அதிகம் விளக்கம் சொல்ல விரும்பவில்லை. 33 சதவீத இடஒதுக்கீடு பெண்களுக்கு கிடைத்துவிடக்கூடாது என்ற சதி எண்ணத்தோடுதான் இந்த சட்டத்தையே பா.ஜ.க. கொண்டு வந்திருக்கிறது என்று நான் கருதுகிறேன். அப்படித்தான் எல்லோருக்கும் எண்ணம் வருகிறது.

மக்கள் முடிவு

நடைபெற இருக்கக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில், சட்டமன்ற தேர்தல்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று இந்த சட்டம் சொல்லியிருந்தால் பிரதமர் நரேந்திரமோடியை நாம் எல்லாம் பாராட்டலாம். என்ன நடந்திருக்கிறது?. மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகு, அதை வைத்து தொகுதி வரையறை பிரச்சினைகள் எல்லாம் முடிந்த பிறகு சொல்வார்களாம்.

பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கொடுத்துவிட்டதாக பிரதமர் மோடி சொல்கிறார். 2029-ம் ஆண்டுதான் அந்த இடஒதுக்கீடு கிடைக்கும் என்றும், 2034-ம் ஆண்டுகூட ஆகலாம் என்றும் கணக்கிட்டு சொல்கிறார்கள். எதுவாக இருந்தாலும் நான் சொல்கிறேன். 2024-ம் ஆண்டுக்கு பிறகு மோடி ஆட்சி இருக்கப்போவதில்லை என்பதை மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்.

உண்மையான அக்கறை இல்லை

1996-ம் ஆண்டு தி.மு.க.வும், காங்கிரசும் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் இப்படியொரு சட்டத்தை கொண்டுவந்தோம். ஆனால், இந்த நிபந்தனைகள் எல்லாம் அன்றைக்கு நாம் விதிக்கவில்லை. 2010-ம் ஆண்டும் நம்முடைய கூட்டணி இதுபோன்ற ஒரு சட்டத்தை கொண்டுவந்தபோதும் நிபந்தனை எதுவும் விதிக்கப்படவில்லை. இப்போது பா.ஜ.க. நிபந்தனை போடுகிறது என்றால் அவர்கள் உண்மையான அக்கறையோடு இதை கொண்டுவரவில்லை. மகளிர் எந்த உரிமைகளையும் பெற்றுவிடக்கூடாது. வீட்டிற்குள் முடங்கிக் கிடக்க வேண்டும் என்று பா.ஜ.க. நினைக்கிறது.

பெண்களின் குரல்

இப்போது அந்த உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. 50 சதவீதத்துக்கு மேலேயே பெண்கள் பொறுப்பில் இருக்கிறார்கள். போகிற போக்கை பார்த்தால் ஆண்களுக்கு இடஒதுக்கீடு கேட்கும் நிலை வரும். ஆத்திரத்தில் சொல்லவில்லை, பெருமையாக சொல்கிறேன். பா.ஜ.க. கொண்டு வந்திருக்கக்கூடிய சட்டத்தில் இன்னொரு முக்கியமான விஷயம். இதர பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கும், சிறுபான்மையின பெண்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கவில்லை. அப்படி வழங்கினால்தான் ஏழை விளிம்புநிலை மக்களுடைய நிலை, அவர்களின் குரல் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் ஒலிக்கும். அப்படி ஒலிக்கக்கூடாது என்று பா.ஜ.க. நினைக்கிறது.

இதை பா.ஜ.க.வின் அரசியல் தந்திரமாக மட்டுமல்ல, அரசியல் சதியாகவும் பார்க்க வேண்டியிருக்கிறது. இதை சுட்டிக்காட்டி நாம் பேசினால், பிரதமராக இருக்கக்கூடிய மோடி என்ன பதில் சொல்கிறார். அதாவது, பெண்களை சாதி ரீதியாக பிளவுபடுத்த பார்க்கின்றோமா. சாதி ரீதியாக, மத ரீதியாக மக்களை பிளவுபடுத்துவது யார் என அனைவருக்கும் தெரியும்.

இந்தியா கூட்டணி

இடஒதுக்கீடு கேட்கின்றோம் என்றால், சாதி ரீதியாக அதை பிரிக்க கேட்கின்றோம் என்று அல்ல. அனைத்து பெண்களும் எல்லாவித உரிமைகளை பெற்றவராக உயர வேண்டும் என்பதற்காகத்தான். இதை விட்டுக்கொடுத்துவிட்டால், அடுத்தடுத்து சமூக நீதியை காவு வாங்கிவிடுவார்கள். எந்த சூழ்நிலையிலும் இந்த சமூக நீதியை நாம் விட்டுகொடுத்துவிடக்கூடாது. அதுதான் நமக்கு இருக்க வேண்டிய உறுதி. சமூக நீதிக் குரலைத்தான் ராகுல்காந்தி இப்போது எதிரொலித்துக் கொண்டிருக்கிறார்.

இந்தியா கூட்டணி என்பது வெறும் தேர்தல் கூட்டணி மட்டும் அல்ல, கொள்கை கூட்டணி அதை மறந்துவிடாதீர்கள். சமூக நீதி, மதச்சார்பின்மை, மாநில சுயாட்சி, கூட்டாட்சி கருத்தியல், அனைவருக்குமான அரசியல் பங்கீடு என்று கோட்பாடுகளை கொண்டதாக இந்த இந்தியா கூட்டணி அமைந்திருக்கிறது.

இந்தியா கூட்டணியை வெற்றிபெற வைப்பதின் மூலமாக மகளிர் உரிமை மட்டுமல்ல, அனைத்து உரிமைகளும், அனைவருக்கும் கிடைக்கக்கூடிய இந்தியாவாக நாம் உருவாக்க வேண்டும்.

இந்தியா முழுவதும் பரவும் மகளிர் உரிமைப்பெற்ற மாநாடாக நிச்சயம் அமையும். வாழ்க இந்தியா வாழ்க, வெல்க இந்தியா கூட்டணி வெல்க.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story