பாஜக போராட்டம்: அண்ணாமலை உள்ளிட்ட 800 பேர் மீது வழக்குப்பதிவு


பாஜக போராட்டம்: அண்ணாமலை உள்ளிட்ட 800 பேர் மீது வழக்குப்பதிவு
x

அமைச்சர் சேகர்பாபுவை பதவி நீக்கம் செய்யக்கோரி பாஜக சார்பில் இன்று மாலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே போராட்டம் நடந்தது.

சென்னை ,

அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் சனாதனத்தை வைத்து போட்டியிடலாமா என்றும், அறநிலையத்துறையை விட்டு தமிழக அரசு வெளியேற வேண்டும் என்றும் அண்ணாமலை கூறினார். மேலும் செந்தில் பாலாஜிக்கு வந்த நிலைதான், உதயநிதிக்கும், ஆ.ராசாவுக்கும் வரும் என்று கூறிய அண்ணாமலை, ஆட்சி மாறும் போது காட்சி மாறும் என்று எச்சரித்தார்.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட அண்ணாமலை தலைமையில் பாஜகவினர் ஊர்வலமாக புறப்பட்டனர். கூட்டத்திற்கு நடுவே அண்ணாமலை வந்ததால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.

தொடர்ந்து நுங்கம்பாக்கம் பூங்காவை கடந்து செல்ல அனுமதி இல்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அண்ணாமலை மற்றும் தொண்டர்கள் திடீரென்று சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசாரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 800 நபர்கள் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கூடுதல், முறையற்று தடுத்தல், பொதுத் தொல்லை தருதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story