தமிழகத்தில் ஆட்சி அமைக்க நினைக்கும் பா.ஜனதா கனவு பலிக்காது; வைகோ பேட்டி
தமிழகத்தில் ஆட்சி அமைக்க நினைக்கும் பா.ஜனதா கனவு பலிக்காது என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
தமிழகத்தில் ஆட்சி அமைக்க நினைக்கும் பா.ஜனதா கனவு பலிக்காது என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
பொற்கால ஆட்சி
நெல்லையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியை மிக வெற்றிகரமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார். 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் சமீபத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
அவர் சொல்லாததையும் செய்து காட்டி சாதித்து வருகிறார். தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடந்து வருகிறது.
பா.ஜனதா கனவு பலிக்காது
இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணித்து தமிழகத்தை கைப்பற்றலாம் என நினைக்கும் பா.ஜனதா கட்சியின் கனவு ஒருபோதும் நிறைவேறாது.
தமிழகத்தில் கால் எடுத்து வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பா.ஜனதாவினர் தினம்தோறும் அறிக்கை, பேட்டி கொடுத்து வருகின்றனர். பிரதமர் மோடி சாதுரியமானவர், மகா கெட்டிக்காரர். தமிழகத்துக்கு வந்தால் திருவள்ளுவர், பாரதியாரை பற்றி பேசுகிறார். வட மாநிலங்களுக்கு சென்றால் இந்தியில் பேசுகிறார். இந்தியையும், இந்துத்துவா சக்திகளையும் நிலைநாட்ட பிரதமர் செயல்பட்டு வருகிறார்.
திருவள்ளுவர், பாரதியாரை பற்றி சொல்லியும், தமிழ் இலக்கியங்கள் பற்றி சொல்லியும் வந்தால் ஏமாந்து விடுவார்கள் என மோடி பகல் கனவு காண்கிறார். நரேந்திர மோடியின் பகல் கனவு ஒருபோதும் பலிக்காது, அதற்கு தமிழகம் இடம் தராது.
துப்பாக்கி சூடு
தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக நாங்கள் அமைத்த முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழு 10 நாட்கள் தூத்துக்குடியில் தங்கி இருந்து விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து அறிக்கை தந்துள்ளது. தற்போது நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான குழு கொடுத்துள்ள அறிக்கையிலும் அந்த சாட்சியங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும் என நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது ம.தி.மு.க துணை பொதுச் செயலாளர் தி.மு.ராஜேந்திரன், நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் நிஜாம் உள்பட பலர் உடன் இருந்தனர்.