மக்காச்சோள சாகுபடியில் அதிகரிக்கும் படைப்புழுக்கள் தாக்குதல்


மக்காச்சோள சாகுபடியில் அதிகரிக்கும் படைப்புழுக்கள் தாக்குதல்
x
திருப்பூர்


குடிமங்கலம் பகுதியில் மக்காச்சோள சாகுபடியில் படைப்புழுக்களின் தாக்குதல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

பராமரிப்பு

குடிமங்கலம் வட்டாரத்தில் மானாவாரியில் மக்காச்சோளம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இதுதவிர இறவைப் பாசனத்திலும், சொட்டுநீர்ப் பாசனத்திலும் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தநிலையில் தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோளப் பயிர்களில் படைப்புழுக்களின் தாக்குதல் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் மகசூல் இழப்பு ஏற்பட்டு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.எனவே வேளாண்மைத்துறையினர் சரியான வழிகாட்டல்கள் வழங்கி படைப்புழுக்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கூறினர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

மக்காச்சோளத்தைப் பொறுத்தவரை பெரிய அளவிலான பராமரிப்பு தேவைப்படாத பயிராகத் தான் பார்க்கப்பட்டது.ஆனால் கடந்த சில ஆண்டுகளாகத் தான் மக்காச்சோளத்தில் படைப்புழுக்களின் தாக்குதல் தொடங்கியுள்ளது.இதனால் விவசாயிகள் உழவு முதல் அறுவடை வரை அனைத்து நிலைகளிலும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.இதற்கு மருந்து தெளிப்பு, ஆள் கூலி என அதிக அளவில் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வழிகாட்டல் இல்லை

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் படைப்புழுக்கள் தாக்குதல் தொடங்கியபோது அரசு, வேளாண்மைத்துறை மூலம் மருந்து உள்ளிட்டவற்றை வழங்கியது. ஆனால் இதுபோன்ற எந்தவிதமான உதவிகளும் வழங்கப்படவில்லை. தற்போது பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளத்தில் இலைகளை மட்டுமல்லாமல் குருத்து, கதிர் என அனைத்தையும் படைப்புழுக்கள் சேதப்படுத்துகிறது. இதனால் மிகப்பெரிய இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. தற்போது மழை பெய்துள்ளதால் பெரும்பாலான விவசாயிகள் மக்காச்சோள சாகுபடி தொடங்க ஆர்வமாக உள்ளார்கள்.ஆனால் இதுவரை வேளாண்மைத்துறை மூலம் எந்தவிதமான வழிகாட்டல்களும் வழங்கப்படவில்லை. தற்போது மக்காச்சோளம் குவிண்டால் ரூ. 2500 வரை விற்பனையாகிறது. இது ஓரளவு கட்டுப்படியாகும் விலை என்பதால் ஆர்வம் காட்டும் விவசாயிகள், படைப்புழுக்கள் குறித்த அச்சத்தால் சாகுபடியைத் தவிர்க்கும் நிலை உள்ளது.இதனால் குடிமங்கலம் வட்டாரத்தில் மக்காச்சோளம் சாகுபடிப் பரப்பு குறையும் நிலை ஏற்படும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.


Next Story