மரக்கிளைகள் முறிந்து விழுந்து மின்தடை
திருவெண்காடு பகுதியில், மழையால் மரக்கிளைகள் முறிந்து விழுந்து மின்தடை ஏற்பட்டது. அதனை விரைந்து சீரமைத்த ஊழியர்களுக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
திருவெண்காடு:
மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காடு அதனை சுற்றியுள்ள நாங்கூர், காத்திருப்பு, மங்கைமடம், மணிக்கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றுமுன் தினம் இரவு முழுவதும் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. இதனால் காத்திருப்பு மற்றும் நாங்கூர் பகுதியில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்ததால் இரவு நேரத்தில் மின்வினியோகம் தடைபட்டது. இதுகுறித்து மேற்கண்ட பகுதி மக்கள் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்தனர். இதனைத் தொடர்ந்து திருவெண்காடு மின்வாரிய உதவி பொறியாளர் ரமேஷ், ஆக்க முகவர் குணசேகரன் மற்றும் 25க்கும் மேற்பட்ட மின்வாரிய பணியாளர்கள் விரைந்து சென்று இரவோடு இரவாக மின் கம்பிகள் மேல் முறிந்து விழுந்த மரக்கிளைகளை அப்புறப்படுத்தி சுமார் ஒரு மணி நேரத்திற்குள் மேற்கண்ட இடங்களுக்கு மின்வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். இரவு நேரத்தில் துரிதமாக செயல்பட்டு மின்வினியோகம் செய்த ஊழியர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.