151 கிேலா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த அண்ணன், தம்பி கைது


151 கிேலா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த அண்ணன், தம்பி கைது
x

குளித்தலையில் 151 கிேலா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த அண்ணன், தம்பி கைது செய்யப்பட்டனர். மேலும் 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கரூர்

வாகன சோதனை

கரூர் மாவட்டம், குளித்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் மற்றும் தனிப்படை போலீசார் திருச்சி - கரூர் புறவழி தேசிய நெடுஞ்சாலையில் குளித்தலை கடம்பர்கோவில் பகுதி அருகே நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக தனித்தனியே மோட்டார் சைக்கிள்களில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த 2 பேரிடமும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதை போலீசார் பார்த்துள்ளனர்.

அண்ணன்-தம்பி கைது

இதனை தொடர்ந்து அவர்கள் யார் என்று போலீசார் விசாரித்த போது அவர்கள் 2 பேரும் குளித்தலை தெற்குமடவாள தெருவைச் சேர்ந்த ஆசாத் (வயது 42), சாதிக் (36) என்பது தெரிய வந்துள்ளது.இதில் அவர்கள் 2 பேரும் அண்ணன் தம்பி என்றும், இதில் சாதிக் சட்ட படிப்பு முடித்தவர் (எல்.எல்.பி) என தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டனர்.

சிறையில் அடைப்பு

அந்த விசாரணையில் அண்ணன், தம்பி 2 பேரும் குளித்தலையில் உள்ள தி.மு.க. பிரமுகர் ஒருவருக்கு சொந்தமாக குளித்தலை பெரியார் நகர் விஸ்தரிப்பு பகுதியில், கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து அந்தக் கட்டிடத்தின் (குடோனில்) தடை செய்யப்பட்ட புகையிலை, பாக்கு ஆகியவற்றை பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்படி அங்கு சென்ற போலீசார் அந்த குடோனில் இருந்த 151 கிலோ எடை கொண்ட புகையிலை, பாக்கு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.அதுபோல அங்கிருந்த பிளாஸ்டிக் கப்புகள், பைகள் ஆகியவற்றையும் அந்த 2 பேரின் மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்து குளித்தலை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். மேலும் இது தொடர்பாக ஆசாத் மற்றும் சாதிக் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை குளித்தலை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் 2 பேரும் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். புகையிலை பொருட்கள் வைத்திருந்த குற்றத்திற்காக கரூர் மாவட்டம் மாயனூர் போலீசாரால் சாதிக் கடந்த வருடம் கைது செய்யப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story