இறைச்சி கடை உரிமையாளர் தற்கொலை
புவனகிரியில் மதுகுடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்ததை மனைவி கண்டித்ததால் இறைச்சி கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.
புவனகிரி,
புவனகிரி அடுத்த மேல்புவனகிரி பெருமாத்தூரை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 64). இவரது மனைவி இந்திராவதி (55). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். ராமமூர்த்தி, சிதம்பரத்தில் கோழி இறைச்சி கடை வைத்து நடத்தி வந்தார். இவர் அடிக்கடி மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்ததாக தெரிகிறது.
அதேபோல் நேற்று முன்தினம் மாலையும் ராமமூர்த்தி வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்று மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதை பார்த்த இந்திராவதி, குடித்து விட்டு எதற்காக மோட்டார் சைக்கிளில் வந்தீர்கள், பஸ்சில் வர வேண்டியது தானே என்று கேட்டு திட்டியதாக கூறப்படுகிறது.
தூக்குப்போட்டு தற்கொலை
இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த ராமமூர்த்தி, வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு சென்று மின்விசிறியில் கேபிள் ஒயரால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த புவனகிரி போலீசார் விரைந்து வந்து, தற்கொலை செய்து கொண்ட ராமமூர்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து இந்திராவதி, புவனகிரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுகுடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்ததை மனைவி கண்டித்ததால் இறைச்சி கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.