நாட்டுப்படகு மீனவர்களுக்கு டீசல் மானியம் கிடைக்குமா?


நாட்டுப்படகு மீனவர்களுக்கு டீசல் மானியம் கிடைக்குமா?
x

கடலில் மீன்பிடிக்க செல்லும் நாட்டுப்படகு மீனவர்களுக்கு டீசல் மானியம் கிடைக்குமா? என மீனவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

புதுக்கோட்டை

நாட்டுப்படகுகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மணமேல்குடி, கட்டுமாவடி, பொன்னகரம் உள்பட அதனையொட்டியுள்ள கடற்கரை பகுதியில் நாட்டுப்படகு மீனவர்கள் ஏராளமானோர் உள்ளனர். இதில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட நாட்டுப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர். இதில் மீனவர்கள் வலையில் ஏராளமான மீன்கள் சிக்குவது உண்டு.

கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் உள்ள மீனவர்கள் விசைப்படகு மூலம் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருவார்கள். இந்த நிலையில் நாட்டுப்படகு மீனவர்கள் தங்களுக்கு தேவையான சில அடிப்படை கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். இதில் படகுகளை நிறுத்த வசதி, டீசலுக்கு மானியம் வழங்குதல், சாலை வசதி ஏற்படுத்துதல், மீனவ கிராமங்களில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு:-

படகுகளை நிறுத்த வசதி

கல்யாணராமன்:- ``நாட்டுப்படகுகளை கடலில் கரையோரம் நிறுத்தி வைக்க போதுமான வசதி இல்லாமல் உள்ளது. மழை, புயல் பேரிடர் காலங்களில் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க கடலில் இருந்து கரைக்கு வரக்கூடிய பகுதியில் ஆறுபோல ஆழப்படுத்தி கொடுத்தால் படகுகளை சற்று பாதுகாப்பாக நிறுத்தி வைக்க முடியும். படகுகளை நிறுத்தக்கூடிய வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். விசைப்படகுகளுக்கு நன்கு வசதியாக தளம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.''

டீசல் மானியம்

கார்வண்ணன்:- ``விசைப்படகுகளில் மீன்பிடிக்க செல்பவர்களுக்கு டீசலுக்கு மானியம் வழங்கப்படுகிறது. அதுபோல கடலில் மீன்பிடிக்க செல்லும் போது நாட்டுப்படகுகளுக்கு டீசல் மானியம் அரசு தரப்பில் வழங்க வேண்டும். நாட்டுப்படகு தொழிலை நம்பி புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் சுமார் 10 ஆயிரம் பேர் உள்ளனர். ஒரு படகில் குறைந்தது 4 முதல் 5 பேர் வரை சென்று கடலில் மீன்பிடித்து வருவோம். மீன் பிடிக்க வரும் தொழிலாளர்களுக்கு கூலி கொடுப்பது போக குறைந்த அளவு தான் வருவாய் உள்ளது. படகில் டீசலுக்கு அதிகம் செலவாகுகிறது. எனவே அரசு மானியம் வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும்''

ஏலக்கடைகள்

சந்திரன்:- ``நாட்டுப்படகுகளில் மீன்களை பிடித்து வருகிற போது அதனை கடற்கரையோரம் வைத்து விற்பனை செய்யக்கூடிய வகையில் ஏலக்கடைகள், வியாபார கடைகள் பொன்னகரத்தில் அமைத்து தர வேண்டும். தினமும் இரவில் கடலில் மீன் பிடிக்க சென்று மறுநாள் காலை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மீனவர்கள் திரும்புவார்கள்.

இதேபோல அதிகாலையில் கடலுக்குள் சென்று நண்பகலில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மீனவர்கள் மீன்பிடித்து வருவார்கள். இதில் மீனவர்கள் வலையில் ஏராளமான மீன்கள் சிக்கும். இதனை கரைக்கு எடுத்து வந்த பின் இரு சக்கர வாகனம் அல்லது சரக்கு வேன்களில் வைத்து சற்று தள்ளியுள்ள மார்க்கெட்டுகளுக்கு கொண்டு வரப்படும். இதனை தவிர்க்க கட்டுமாவடி, பொன்னகரம் பகுதியில் கடற்கரையோரம் மீன் ஏலக்கடை, மீன் மார்க்கெட் கடைகளை அரசு தரப்பில் கட்டிக்கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்.''

அடிப்படை வசதிகள்

தர்மலிங்கம்:- ``மணமேல்குடி, பொன்னகரம், அந்தோணியார்புரம் உள்ளிட்ட கடற்கரையோர பகுதிகளான மீனவ கிராமங்களில் அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை. குறிப்பாக தார்சாலை வசதி, தண்ணீர் வசதி இல்லாமல் உள்ளது. இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.''

நாட்டுப்படகுகளுக்கு டீசல் மானியம் குறித்து மீன்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ``நாட்டுப்படகு மீனவர்கள் உரிய ஆவணங்களுடன் மீன்வளத்துறையிடம் விண்ணப்பித்தால் டீசல் மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றனர்.


Next Story