பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் பணியை தொடங்காதவர்களின் அனுமதி ரத்து
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அனுமதி பெற்றவர்கள் பணியினை உடனடியாக தொடங்கப்படாதவர்களின் வீடு கட்டும் அனுமதி ரத்து செய்யப்படும் என பேராவூரணி ஒன்றிய ஆணையர் எச்சரித்துள்ளார்.
திருச்சிற்றம்பலம்:
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அனுமதி பெற்றவர்கள் பணியினை உடனடியாக தொடங்கப்படாதவர்களின் வீடு கட்டும் அனுமதி ரத்து செய்யப்படும் என பேராவூரணி ஒன்றிய ஆணையர் எச்சரித்துள்ளார்.
ஒன்றியக்குழு கூட்டம்
பேராவூரணி ஊராட்சி ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம், திருச்சிற்றம்பலம் அருகே ஆவணத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில், ஒன்றியக்குழு தலைவர் சசிகலா ரவிசங்கர் தலைமையில் நடந்தது.
துணை தலைவர் ஆல்பர்ட் குணாநிதி, ஒன்றிய ஆணையர் செல்வேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசிய விவரம் வருமாறு:-
துரைமாணிக்கம்:- திருச்சிற்றம்பலத்தில் இருந்த சார்பதிவாளர் அலுவலகம் ரெண்டாம் புளிக்காடு சென்றது ஏன்?. திருச்சிற்றம்பலத்தில் எதற்காக இடம் வழங்கவில்லை. ஊராட்சிகளுக்கான எல்.இ.டி பல்ப் 5 பஞ்சாயத்துகளுக்கு மட்டுமே வந்துள்ளது. மற்ற 21 பஞ்சாயத்துகளுக்கு ஏன் வரவில்லை?. இதற்கு அதிகாரிகளின் நிர்வாக குறைபாடுதான் காரணம்.
பள்ளிகள் மராமத்து
பெரியநாயகி:- களத்தூர் கிழக்கு தொடக்கப் பள்ளிக்கூடத்துக்கு 2 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. அதனை வாங்கித்தரவேண்டும். சேதமடைந்துள்ள நாடங்காடு, களத்தூர் அரசு தொடக்கப்பள்ளிகளில் மராமத்து பணிகளை செய்ய வேண்டும். பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் எதனால் அரைகுறையாக நிற்கிறது?. அதனை முழுமைப்படுத்த வேண்டும்.
சங்கவி:- சாணாகரை, பைங்கால் சாலையை சீரமைக்க வேண்டும்.
பாக்கியம்முத்துவேல்:- ஒட்டங்காடு கடைவீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஆபத்தான வளைவுகளில் வேகத்தடை அமைக்க வேண்டும். கோரவயல்காடு பள்ளிக் கட்டிடத்தை சீரமைக்க வேண்டும். ஒட்டங்காடு பகுதியில், புதிய போர்வெல் அமைத்து தூய்மையான குடிநீர் வழங்க வேண்டும்.
அனுமதி ரத்து செய்யப்படும்
இதனைத்தொடர்ந்து ஒன்றிய ஆணையர் செல்வேந்திரன் கூறுகையில், சார்பதிவாளர் அலுவலகம் அமைக்க செருவாவிடுதியில், செயல்பட்டு வரும் திருச்சிற்றம்பலம் போலீஸ் நிலையம் அருகே இடம் உள்ளது. மக்கள் பிரதிநிதிகள் முயன்றால் அங்கு கொண்டு வரலாம். பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அனுமதி வழங்கப்பட்டு, இதுவரை கட்டப்படாத வீடுகளுக்கு அனுமதி ரத்து செய்யப்படும்.ஒட்டங்காடு கடைவீதியில் வேகத்தடை அமைக்கவும், ஆக்கிரமிப்பு அகற்றவும் நெடுஞ்சாலைத் துறைக்கு கடிதம் எழுதப்படும். ஒட்டங்காடு கடைவீதியில் சில இடையூறுகள் காரணமாக, மழை நீர் வடிகால் வாய்க்கால் அமைக்க முடியாத நிலை உள்ளது.
பாகுபாடு இன்றி பணிகள்
நிறைவாக ஒன்றியக்குழு தலைவர் சசிகலா ரவிசங்கர் பேசுகையில், உறுப்பினர்களுக்கு எவ்வித பாகுபாடும் இன்றி அனைத்து பணிகளும் வழங்கப்படுகிறது. ஒத்துழைப்பு வழங்கி வரும் உறுப்பினர்களுக்கு நன்றி. கடந்த 2003-ல் திருச்சிற்றம்பலத்தில் இயங்கி வந்த சார்பதிவாளர் அலுவலகம் அப்போதைய அரசு நிர்வாக காரணங்களுக்காக இடமாற்றம் செய்யப்பட்டது என்றார்.
கூட்டத்தில், உறுப்பினர்கள் ராஜலட்சுமி, அண்ணாதுரை, சுந்தர், சங்கவி, ராஜப்பிரியா, நவநீதம் மற்றும் என்ஜினீயர் பாரதிதாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஷ் நன்றி கூறினார்.