குமுளி மலைப்பாதையில் கார் கவிழ்ந்து விபத்து:பலியான 8 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்:அமைச்சர் இ.பெரியசாமி வழங்கினார்
குமுளி மலைப்பாதையில் கார் கவிழ்ந்து பலியான 8 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணத்தை அமைச்சர் இ.பெரியசாமி வழங்கினார்.
குமுளி மலைப்பாதையில் கடந்த 23-ந்தேதி 100 அடி பள்ளத்தில் கார் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த அய்யப்ப பக்தர்களான தேவதாஸ், சிவக்குமார், நாகராஜ், முனியாண்டி, கன்னிச்சாமி, வினோத், கலைச்செல்வன், கார் டிரைவர் கோபாலகிருஷ்ணன் ஆகிய 8 பேர் பரிதாபமாக இறந்தனர்.
மேலும் ராஜா, அவருடைய 7 வயது மகன் ஹரிஹரன் ஆகிய 2 பேரும் படுகாயமடைந்து தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று முன்தினம் காயமடைந்தவர்களை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி சந்தித்து நிதி உதவி வழங்கினார். இந்நிலையில் இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதனையடுத்து அமைச்சர் இ.பெரியசாமி இறந்தவர்களின் வீடுகளுக்கே சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் தமிழக அரசு சார்பில் தலா ரூ.2 லட்சம் நிவாரணத் தொகையை வழங்கினார். அப்போது இறந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் கூறினார். இதேபோல் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கி ஆறுதல் கூறினார். அப்போது மாவட்ட கலெக்டர் முரளிதரன், எம்.எல்.ஏ.க்கள் மகாராஜன், சரவணக்குமார், தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன், வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன் மற்றும் அதிகாரிகள், தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.