'கூகுள் பே' மூலம் லஞ்சம் வாங்கிய ஏட்டு மீது வழக்குப்பதிவு


கூகுள் பே மூலம் லஞ்சம் வாங்கிய ஏட்டு மீது வழக்குப்பதிவு
x

கூகுள் பே மூலம் லஞ்சம் வாங்கிய மதுரை போலீஸ் ஏட்டு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது..

மதுரை

கூகுள் பே மூலம் லஞ்சம் வாங்கிய மதுரை போலீஸ் ஏட்டு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது..

ரூ.50 ஆயிரம் லஞ்சம்

மதுரை விளாங்குடி பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 43). இவர் மதிச்சியம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக உள்ளார். அதற்கு முன்பு 2017 முதல் 2020-ம் ஆண்டு வரை கூடல்புதூர் போலீஸ் நிலையத்தில் குற்றதடுப்பு பிரிவில் போலீஸ்காரராக இருந்தார். அப்போது திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா, துத்திமேடையை சேர்ந்த கணேஷ் என்பவர் மீது கொள்ளை தொடர்பாக கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுகுறித்து 2019-ம் ஆண்டு திருப்பத்தூர் மாவட்டம், உமரப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு கணேஷ் மனைவி சுவிதாவை வரைவழைத்து, அங்கு சென்றிருந்த ஏட்டு ராமச்சந்திரன் விசாரணை நடத்தினார். அப்போது அவரிடம் உங்கள் கணவரை வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு சுவிதா மறுத்து விட்டார். மறுநாள் கணேஷ் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை, ஏட்டு ராமச்சந்திரன் மதுரைக்கு அழைத்து வந்துவிட்டார். அதாவது கணேசின் தந்தை துரைச்சாமி, நண்பர்கள் சீனிவாசன், ராஜா ஆகியோர் மதுரைக்கு வந்தனர்.

கூகுள் பே

அவர்களிடம் ஏட்டு ராமச்சந்திரன், கணேசை வழக்கில் இருந்து விடுவிக்க 50 ஆயிரம் ரூபாய் கொடுக்குமாறு கேட்டுள்ளார். அப்படி பணம் கொடுக்காவிட்டால் கணேசை குண்டர் சட்டத்தில் கைது செய்து விடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

அதற்கு துரைச்சாமி தன்னிடம் தற்போது அவ்வளவு பணம் இல்லை என்றும், ஊருக்கு சென்று பணத்தை அனுப்பி வைப்பதாகவும் கூறியுள்ளார்.

எனவே ஏட்டு ராமச்சந்திரன் தனது வங்கி கணக்கில் பணத்தை செலுத்துமாறு தெரிவித்துள்ளார். அதன்படி அவரது வங்கி கணக்கிற்கு கணேஷ் குடும்பத்தினர் பல்வேறு தவணைகளில் கூகுள் பே மூலம் ரூ.72 ஆயிரம் வரை அனுப்பி உள்ளதாக தெரிகிறது. ஆனால் மேலும் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து சுவிதா, லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக ஏட்டு ராமச்சந்திரன் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருந்த நிலையில், தற்போது மதிச்சியம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.

வழக்குப்பதிவு

கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், விளாங்குடியில் உள்ள ஏட்டு ராமச்சந்திரன் வீட்டிற்கு சென்று திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது வீட்டில் இருந்து பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதிபிரியா, லஞ்சம் பெற்றதாக ஏட்டு ராமச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் மதுரை மாநகர போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story